ETV Bharat / state

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்க வாய்ப்பு.. தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 11, 2024, 4:52 PM IST

Election observers advisory meeting: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக தேர்தல் பார்வையாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி வாயிலாக பங்கேற்ற தமிழக அதிகாரிகள்
தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

சென்னை: இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், இன்று (மார்ச் 11) டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக தேர்தல் பார்வையாளர்கள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மாநிலத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், தமிழக தேர்தல் பார்வையாளர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் பணிகள், செலவினங்கள் கணக்கிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு பொது பார்வையாளர் மற்றும் ஒரு செலவின பார்வையாளர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் இரண்டு பொது பார்வையாளர்கள், இரண்டு செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒரு காவல் பார்வையாளர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுப் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், செலவின பார்வையாளர்களாக ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளும், காவல் பார்வையாளர்களாக ஐ.பி.எஸ் அதிகாரிகளும் பணியாற்றுவர்.

இதையும் படிங்க: 'வெறும் கையால் முழம் போடும் பிரதமர் மோடி' - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.