தமிழ்நாடு

tamil nadu

54 லட்சம் மதிப்பிலான தங்கத்துடன் தலைமறைவான நபர்.. சகோதரரைக் கடத்தியது தொடர்பாக அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:11 PM IST

Abducted younger brother case registered 9 person: துபாயிலிருந்து நாகப்பட்டினத்தில் ஒப்படைக்கக் கொடுத்தனுப்பிய ரூ.54 லட்சம் மதிப்பிலான தங்கத்துடன் கொச்சியில் தலைமறைவான நபரின் சகோதரரைக் கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கும்பலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சகோதரரை கடத்திய வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்கு
சகோதரரை கடத்திய வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்கு

தஞ்சாவூர்: கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சுபாஷ், கடந்த சில ஆண்டுகளாக துபாய் நாட்டில் பணியாற்றி வந்தார். அங்குள்ள நபர்கள், சுபாஷிடம் இந்திய மதிப்பில் சுமார் 54 லட்சம் மதிப்பிலான 900 கிராம் தங்கத்தை, நாகப்பட்டினத்தில் உள்ள ரஹினா பேகம் என்பவரிடம் ஒப்படைக்கக் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் கடந்த 22ஆம் தேதி இந்தியா வந்த சுபாஷ் கும்பகோணம் செல்லாமல் கொச்சின் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சுபாஷ் சொந்த ஊர் திரும்பவில்லை என்றும், துபாயிலிருந்து கொடுத்து அனுப்பிய 900 கிராம் தங்கத்தை நாகையில் உள்ள ரஹீனா பேகத்திடமும் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நகை யாருக்குச் சேர வேண்டுமோ அந்த நபர்கள் கும்பகோணத்தில் உள்ள ரவுடிகள் சிலர் துணையுடன் கடந்த 6ஆம் தேதி கும்பகோணம் பாலகரைப் பகுதியில் உள்ள சுபாஷின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் சுபாஷ் இன்னும் வீட்டிற்கு வந்து சேரவில்லை எனக் கூறியதையடுத்து ஆத்திரமுற்ற அந்த கும்பல், அங்கிருந்த சுபாஷின் சகோதரர் சுரேஷை அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் கடத்தப்பட்ட சுரேஷின் அலைபேசி எண்ணின் உதவியோடு அவர் திருச்சி, சிங்காரத்தோப்பில் உள்ளார் எனத் தெரியவந்தது.

அங்க சென்ற போலீசார் சுரேஷை மீட்டு, அவரை கடத்தப் பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்ட 8 பேரைக் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 2 கத்தி, 2 அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முக்கிய நபரான ரஹினா பேகத்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில், ரஹீனா பேகம் மற்றும் அவரது உறவினர்களான, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சல்மான், அப்துல் ஹாசன், மன்சூர் அலி, கும்பகோணத்தைச் சேர்ந்த முருகன், சித்திரவேல், தினேஷ், மாணிக்கவாசகம், ராஜா ஆகிய 9 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் ரஹீனா பேகம் தவிர அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் அனைவரையும் நீதிமன்ற நடவடிக்கைக்குப்படுத்தும் வகையில், கும்பகோணம் குற்றவியல் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தலைமறைவாகவுள்ள நாகப்பட்டினத்தை ரஹீனா பேகம், இவ்வழக்கில் 2வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு அவரை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ரஹீனா பேகம், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவ்வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ரஹீனா பேகத்தின் உறவினரான சல்மான், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், 900 கிராம் தங்கத்தைக் கொண்டு வந்த சுபாஷ் பற்றியும், அவர் கொண்டு வந்த தங்கத்தைப் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தஞ்சையில் மகளிர் தின கொண்டாட்டம்.. கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்களுக்குப் புடவை வழங்கி வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details