ஐதராபாத்: நடப்பாண்டுக்கான 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் கேப்டன் தொடங்கி அனைவரையும் மாற்றி அமைத்து வருகிறது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 20 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
அதேபோல் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேநேரம் கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் 3வது முறையாக கேப்டனை மாற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மற்றும் பயிற்சியாளராக டாம் மூடி செயல்பட்டனர்.