தமிழ்நாடு

tamil nadu

“மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும்” - விஜயை வரவேற்ற சீமான்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:03 PM IST

Seeman about Vijay: மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும் என அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

விஜய்க்கு சீமான் அட்வைஸ்
விஜய்க்கு சீமான் அட்வைஸ்

சென்னை:நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயின் அரசியல் கட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “நான் கூட்டணிக்கு வர மாட்டேன் என்று தெரிந்துதான் என்னை கூட்டணிக்கு அழைக்கிறார்கள். அதிகபட்சமாக அவர்கள் எனக்கு பணம்தான் கொடுக்க முடியும். எப்படி பார்த்தாலும் நான் தனியாகவே போட்டியிடுவேன். ஒரு தொகுதி, இரண்டு தொகுதி வெற்றி பெற்று ஒன்றும் செய்ய முடியாது. வேண்டும் என்றால் மேசையை மட்டும் தட்டலாம்.

விஜய் அரசியலுக்கு வருவது முன்பே எல்லாருக்கும் தெரியும். அவர் வரும்போது தட்டிதான் கொடுக்க வேண்டும். கூடுதலாக ஒருவர் வந்து அரசியலில் வேலை செய்தால், அது வலிமைதான். விஜய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வந்தால் அது பயன் தராது. அரசியல் கட்சி தொடங்குவது எளிது, தொடர்வது கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும், ஈடுபாடும் கடைசிவரை தொடர்ந்து இருந்தது என்றால் யாவரும் வெல்லலாம்.

அவர் என்ன கோட்பாடு வைத்துள்ளார்கள் என்பதை பார்த்துவிட்டு, அப்புறம் பேச வேண்டும். இன்று இருக்கின்ற அரசியல் சூழலில், ஒரு நடிகரின் ரசிகர்கள் மட்டும் வாக்கு செலுத்தி நாட்டை ஆள முடியாது. ஆனால் வெகுவான மக்களை நாம் கவர வேண்டும். எம்ஜிஆருக்கு பொதுவான மக்களின் ஆதரவாக இருந்தது. மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும்.

என் நிலத்தில் காங்கிரஸ், பாஜக நுழைய விடாமல் இருக்க வேண்டும். பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் இருந்தும், பத்து ஆண்டுகள் பாஜக இருந்தும், இந்த நாடு அரை இன்ச் கூட வளரவில்லை. ஜிஎஸ்டி நேர்முக வரி, மறைமுகவரி மூலம் கிடைக்கும் நிதி, எந்தெந்த திட்டங்கள் மூலமாக மக்களுக்குச் சென்று அடைகிறது? அதை மட்டும் முதலில் நிதி அமைச்சர் ஒரு முறை படித்துக் காட்ட வேண்டும்.

இந்தியா கூட்டணி ஒரு விளங்காத கூட்டணி என்று அனைவருக்கும் தெரியும். ப்ரோ கபடி லீக்கில் மிகவும் மோசமாக விளையாடி வருவது தமிழ் தலைவாஸ் அணிதான். அதேபோல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடும் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. டாஸ்மாக்கை தமிழ்நாடு அரசு நடத்துவது போல், தரமான திரைப்படங்களை ஏன் அரசு எடுக்கக் கூடாது?

அனைத்தையும் தனியார் முதலாளிகளிடம் கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள். அதேபோல், கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களின் திறன்களை வளர்க்க எந்த பணியும் செய்யவில்லை. ஒரு நாட்டின் நலன் என்பது கல்வி, விளையாட்டு, இலக்கியம் என அனைத்தும் சார்ந்ததுதான்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜயின் அரசியல் யாரை எதிர்க்கிறது? யாருடைய ஓட்டுக்கு வேட்டு?

ABOUT THE AUTHOR

...view details