தமிழ்நாடு

tamil nadu

உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடி: ராணுவ பட்ஜெட் உயர முக்கிய காரணமா? வளர்ச்சியின் முக்கியத்துவத்தை இழக்கிறதா உலக நாடுகள்? - Global Security Crisis

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 8:38 PM IST

உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச நாடுகளின் ராணுவ பட்ஜெட் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்து டாக்டர். ராவெல்லா பானு கிருஷ்ண கிரண் விவரிக்கிறார்..

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு உலகளாவிய பாதுகாப்பு பட்ஜெட்டின் செலவு 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதேநிலை 2024ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதகாவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவுடனான வளர்ந்து வரும் பதட்டங்கள், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மெதுவாக்கும் முயற்சிகள், தைவானை பெய்ஜிங்கின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீன அதிபர் ஜி ஜின்பிங் இலக்கு மற்றும் தென் சீனக் கடலில் அதன் பிரகடனப்படுத்தப்பட்ட கடல்சார் உரிமைகோரல்களுக்கு மத்தியில் உலக நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டின் செலவு 2.2 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன.

மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், செங்கடல் பகுதியில் நிலவும் நெருக்கடி மற்றும் இஸ்ரேல் மீது ஈரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் ஆகியவை உலகளவில் போர் பிரகடனத்திற்கான சூழலை அதிகப்படுத்துகின்றன. சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் (IISS) அறிக்கையின் படி ஆர்டிக் பகுதியில் அதிகரித்து வரும் இடையூறுகள், வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனை முயற்சிகள், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரானின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் ராணுவ ஆட்சிகளின் எழுச்சி என பாதுகாப்பு பட்ஜெட்டை உலக நாடுகள் உயர்த்த முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.

உக்ரைனில் நடந்த போரில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களால் பல நாடுகளில் ராணுவத்திற்கான தளவாடங்களை பெருக்குவது மற்றும் எதிர்வரும் போரை சமாளிக்க தேவயான பங்குகளை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கி உள்ளன. இதன் விளைவாக, உலக நாடுகள் அதிகமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேமித்து வைப்பதற்கும், சைபர் போர், பயங்கரவாதம் போன்ற சவால்களை சமாளிக்கவும், ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட புதிய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஐஐஎஸ்எஸ் அறிக்கையின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து ஐரோப்பாவில் அமெரிக்க அல்லாத அனைத்து நேட்டோ உறுப்பினர்களும் தங்களது பாதுகாப்பு பட்ஜெட்டை 32 சதவீதம் வரை அதிகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நேட்டோவின் வில்னியஸ் உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தையாவது பாதுகாப்பு திட்டங்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி 19 உறுப்பினர் நாடுகள் கடந்த 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக தங்களது பாதுகாப்பு திட்டங்களுக்காக செலவிடுகின்றனர். நேட்டோ உறுப்பு நாடு 2024 ஆம் ஆண்டில் பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீமாக உயர்த்துவதற்கான திட்டங்களை சமீபத்தில் அறிவித்தது.

மேலும், முன்னாள் சோவியத் குடியரசின் உறுப்பு நாடான எஸ்டோனியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை சுமார் 3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்புச் செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்ற இலக்கை நெருங்கி வருவதால், சில ராணுவ வல்லுநர்கள் எதிர்காலத்தில் மோசமடைந்து வரும் சூழ்நிலைகளைச் சமாளிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் அளவுக்கு செலவழிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், ப்ளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே கூடுதலாக 10 டிரில்லியன் டாலர் ராணுவச் செலவுகளை திட்டமிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்புச் செலவினங்களுக்காக நேட்டோவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை ஈடுபடுத்துவது என்பது ஏற்கனவே ஐரோப்பா நாடுகளின் கடும் ஆட்சேபனைக்கு உள்ளானது.

நேட்டோ உறுப்பினர் நாடுகள் தங்கள் வரவுசெலவுத் திட்டங்களின் உள்ள பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் வரை பாதுகாப்புக்காக செலவழிக்க உறுதியான உறுதிப்பாட்டை ஏற்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக வரிவசூல் உள்ளிட்ட செயல்பாடுகளின் மூலம் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு 4 சதவீதம் வரை செலவழிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் முடிவடையாததால் நேட்டோ உறுப்பு நாடுகள் நிதி அழுத்தத்தை எதிர்கொண்டு உள்ளன. நேட்டோ அமைப்பின் முக்கிய நிதி பங்கீடு நாடான அமெரிக்கா கடந்த 2023ஆம் ஆண்டு நேட்டோ அமைப்பின் மொத்த செலவினத்தில் 65 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி வழங்கி உள்ளது.

மேலும், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு இதுவரை 75 பில்லியன் டாலருக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தை எதிர்கால பாதுகாப்பு சவால்களுக்குத் தயாராக நிதியாக ஒதுக்கி வரும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பல்வேறு நிதி அழுத்தங்களில் திண்டாடி வருகின்றன.

அதேநேரம் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் அதேநேரத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி சுகாதார தேவைகளும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ராணுவத்திற்கு அதிகளவில் செலவுகளை அதிகரிப்பது பணவீக்கத்தை மோசமாக்கும் மற்றும் வட்டி விகிதங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சில பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான McKinsey வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு செலவினம் 2022 ஆம் ஆண்டு 260 பில்லியன் டாலரை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் இருந்து 6 சதவீதம் வாரை பாதுகாப்பு செலவுகளுக்கான நிதி பங்களிப்பு அதிகரித்து வருவதாகவும், 2028 ஆம் ஆண்டு பாதுகாப்பு திட்டங்களுக்கான செலவு 500 பில்லியன் யூரோவாக உயரக்கூடும் என கணித்து உள்ளது.

கடந்த 1960 முதல் 1992 வரையில் பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கிய தொகையின் சராசரியுடன் ஒப்பிடும்போது, அதிகரித்து உள்ளதாகவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் அதன் பழைய அணுகுமுறையில் இருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கருத்துகளை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ராணுவ செலவு 877 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 905.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்து உள்ளது. மேலும் அமெரிக்கா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதத்தை நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்குகிறது.

அதேநேரம் சீனாவின் ராணுவச் செலவு 2014 முதல் 2021 வரை 47 சதவீதம் அதிகரித்து, 270 பில்லியன் டாலராகவும், 2024ஆம் ஆண்டு 7.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. ரஷ்ய தனது பாதுகாப்புச் செலவுக்காக 2024ஆம் ஆண்டு நாட்டின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கான 60 சதவீத நிதியை ஒதுக்கி உள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரஷ்யா ஏறத்தாழ 7.5 சதவீதத்தை ராணுவ பட்ஜெட்டுக்காக ஒதுக்கி உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்பு திட்டங்களுக்ககா ஒதுக்க வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் இலக்கை விட ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு திட்டங்களுக்காக குறைவாகவே செலவழித்தாலும், அமெரிக்கா இல்லாமல் கூட, நேட்டோவின் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பட்ஜெட்டை ரஷ்யாவால் ஈடுகட்ட முடியாது.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 22 நாடுகளை எடுத்துக் கொண்டால் பாதுகாப்பு உளவுத்துறை நிறுவனமான ஜேன்ஸின் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, மலேசியா 10.2 சதவீதம் பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரித்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ளதாகவும், நடப்பாண்டு 4.2 பில்லியன் டாலர் நிதியை பாதுகாப்பு பட்ஜெட்டுக்காக ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் 8.5 சதவீதம் அதிகரித்து 6.6 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறப்பட்டு உள்ள்து. இந்திய பாதுகாப்பு பட்ஜெட் 2023-2024 நிதியாண்டில் 5 லட்சத்து 93 ஆயிரத்து 538 கோடி ரூபாயாக இருந்தது. உலகளவில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக 2024-2025 நிதி ஆண்டில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 541 கோடியாக பாதுகாப்பு பட்ஜெட்டை மத்திய அரசு அதிகரித்து உள்ளது.

ராணுவ பட்ஜெட்டுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

பெரிய அளவிலான பாதுகாப்பு பட்ஜெட் வரவு செலவுத் திட்டங்கள் மட்டுமே உலகளாவிய மோதல்கள் மற்றும் நிலையற்ற பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்காது. தைவானை கைப்பற்ற நினைக்கும் சீனாவின் நீண்ட உறுதிப்பாடு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, மேற்கு ஆசியா நாடுகளில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக உலக நாடுகளிடையே பாதுகாப்பு திட்டங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்காக தூண்டுதல்களை அதிகரித்து உள்ளது. இதற்கு மத்தியில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய நாடுகளுடன் ஒன்றிணைந்து தங்களது பொருளாதாரங்களை வளர்க்க முன்வர வேண்டும்.

இதையும் படிங்க:90 வயதை கடந்த இந்திய ரிசர்வ் வங்கி! சர்வதேச அளவில் சந்தித்த சவால்களும்... சாதனைகளும்..! - 90 Years Of RBI

ABOUT THE AUTHOR

...view details