தமிழ்நாடு

tamil nadu

"மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்"- பாரத் நியாய யாத்திரை நிறைவு விழாவில் ஸ்டாலின் பேச்சு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 8:02 PM IST

Updated : Mar 18, 2024, 5:12 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை நிறைவு விழா மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. நிறைவு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்
மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம்

மும்பை :காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி ஏறத்தாழ 150 நாட்கள் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து ஜம்மு காஷ்மீரில் நிறைவு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா என்ற பெயரில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ராகுல் காந்தி தனது அடுத்த யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையானது நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்பட்டது.

மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாம், நாகாலாந்து, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று (மார்ச். 17) நிறைவடைகிறது. ஏறத்தாழ 63 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் யாத்திரை நிறைவடைந்த நிலையில், சிவாஜிபார்க் மைதானத்தில் நிறைவு விழா நடைபெறுகிறது. இதில் இந்தியா கூட்டணியை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். இந்தியாவின் இதயத்தை புரிந்து கொள்ள ராகுல் காந்தி இந்தியா முழுவதும் யாத்திரை சென்று உள்ளார். பாஜகவால் அழிக்கப்பட்ட இந்தியாவை மீட்கும் பயணம் இது" என்றும் தெரிவித்தார்.

இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பரூக் அப்துல்லா, பீகார் தேஜஸ்வி யாதவ், சிவ சேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்ரே, மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :தேர்தல் பத்திரம்: ரூ.650 நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

Last Updated :Mar 18, 2024, 5:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details