வரட்டி சாணத்தால் தாக்கும் விநோத திருவிழா.. ஆந்திராவில் உகாதியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! கர்னூல்: தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி பண்டிகை நாடு முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் (ஏப்ரல் 09) கொண்டாடப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் இந்த பண்டிகையையொட்டி பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கயிறுபள்ள எனும் கிராமத்தில் வரட்டி சாணத்தை வைத்துத் தாக்கிக் கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ளது கயிறுபள்ள கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வீரபத்திர கோயிலில் ஆண்டுதோறும் சாண வராட்டியால் பக்தர்கள் தாக்கிக் கொள்ளும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் 30 பேர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
இத்திருவிழாவிற்காகச் சேகரிக்கப்பட்ட வரட்டி சாணங்கள் வீதிகளில் குவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இரு குழுக்களாகப் பிரிந்து பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். கிட்ட தட்ட 30 நிமிடத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த நிகழ்விற்குப் பின் வீரபத்திர சுவாமிக்கும் பத்திரகாளி தேவிக்கும் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினர். இதனைக் காணச் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வருகை புரிந்தனர்.
கோயில் வரலாறு:திரேதாயுகத்தில் வீரபத்திர சுவாமியும், பத்திரகாளி தேவியும் காதல் செய்து வந்ததாகக் கோயில் வரலாறு கூறுகிறது. வீரபத்திர சுவாமி திருமண நிகழ்விற்குத் தாமதம் செய்ததாகவும், இதனால் காதல் செய்து திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகப் பத்திரகாளி தரப்பினர் தவறாகப் புரிந்து கொண்டு வீரபத்திர சுவாமியைச் வரட்டி சாணத்தால் தாக்க முயற்சி செய்ததாக ஊர் பொதுமக்கள் மத்தியில் ஒர் ஐதிகம் உள்ளது.
அதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் உகாதியை முன்னிட்டு பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டு பின்னர் சமரசம் அடைந்து வீரபத்திர சுவாமிக்கும் பத்திரகாளி தேவிக்கும் திருமண உற்சவம் செய்து வைக்கின்றனர்.
இதையும் படிங்க:நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி.. பெண்ணை கடித்ததால் பரபரப்பு - வெளியான சிசிடிவியால் மக்கள் அச்சம்! - Bear Attack In Tirunelveli