ETV Bharat / state

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி.. பெண்ணை கடித்ததால் பரபரப்பு - வெளியான சிசிடிவியால் மக்கள் அச்சம்! - Bear Attack in tirunelveli

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 10:58 AM IST

Updated : Apr 11, 2024, 4:56 PM IST

Bear Attack: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி பகுதியில் ஊருக்குள் புகுந்த கரடி பெண்ணை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் கரடியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பகுதியில், இன்று (ஏப்.11) அதிகாலை வேளையில் கரடி ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது.

பின்னர், அந்த கரடி பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல் தெரு மற்றும் வீரப்பர் தெரு, முதலியபுரம் வழியாகச் சென்றுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கரடியை விரட்டி அடித்த நிலையில், ஒரு வீட்டின் தோட்டத்தில் பதுங்கி இருந்துள்ளது. அப்போது, தோட்டத்திற்குள் நுழைந்த லட்சுமி என்ற பெண்ணைத் தாக்கிய கரடி, அவரது கையில் கடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், சாலையிலிருந்த வாகனங்களை அக்கரடி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வந்த அம்பாசமுத்திரம் வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர், ஊருக்குள் புகுந்த கரடியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் வனத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரடியைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, ஊருக்குள் புகுந்த கரடி தெருக்கள் வழியே வலம் வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்தாண்டு ஆழ்வார்குறிச்சி அருகே இருவரைக் கரடி மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கரடி ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதால் மலையடிவார மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: நல்லத்துக்குடி கிராமத்தில் சிறுத்தை நடமாட்டமா? கால்தடத்தால் ஏற்பட்ட பதற்றம்! - Leopard Movement In Mayiladuthurai

Last Updated : Apr 11, 2024, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.