திருச்செந்தூர் தெய்வானை யானைக்கு உடல்நல பாதிப்பு - பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

By

Published : Mar 15, 2023, 9:57 PM IST

thumbnail

தூத்துக்குடி: புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெய்வானை (25) என்ற யானை, கோயில் யானையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.  மரு மற்றும் பூஞ்சை போன்ற தோல் நோய் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் யானையின் உடலிலும், கால் நகங்களிலும் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து கால்நடை மருத்துவர் குழு, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன் முன்னிலையில் இன்று (மார்ச் 15) பரிசோதனை செய்தனர்.  இந்த பரிசோதனையின் முடிவில், கோயில் யானை தெய்வானை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, “கோயிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் உணவு வகைகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை யானைக்குக் கொடுக்கின்றனர். 

இவற்றுள் சில உணவுகள் யானைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, யானையின் உணவுப் பழக்கத்தை இயற்கைக்கு எதிரானதாக மாற்றி விடுகிறது. எனவே, இனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானை தெய்வானைக்கு கொடுக்க விரும்புவதை, யானைப் பாகனிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு பக்தர்கள் கொடுப்பவற்றில் இருந்து தேவையானவை மட்டும் யானைக்கு உணவாக வழங்கப்படும். மேலும் யானை தெய்வானைக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் தீர அவற்றின் மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இதன் அடிப்படையில், மேற்கொண்டு சிகிச்சை நடைபெறும்” என கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன் தெரிவித்தார். இந்த பரிசோதனையின்போது அறங்காவலர் செந்தில் முருகன், கால்நடை மருத்துவர்கள் மதிவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), பணி ஓய்வு பெற்ற தேனி கால்நடை உதவி இயக்குநர் உமாகாந்தன் ஆகியோர் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.