காயமடைந்த பெண் யானைக்கு ஆனைமலை டாப்ஸ்லிப்பில் சிகிச்சை
Published: Mar 18, 2023, 6:35 PM

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள ஆதி மாதையனூர் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் மெலிந்த யானை ஒன்று சுற்றித் திரிந்தது. எனவே இந்த யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், டாப்ஸ்லிப்பில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி சின்னத்தம்பி யானையின் உதவியோடு, உடல் மெலிந்த யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர் சுகுமார் கூறுகையில், “இந்த யானைக்கு 15 வயது இருக்கலாம். ஆண் யானை தந்தத்தால் தாக்கியதில், இதற்கு நாக்கில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இதனால் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த யானை சாப்பிட்டு மூன்று வாரங்கள் இருக்கும். மேலும் இந்த யானைக்கு சிகிச்சை அளிக்க டாப்ஸ்லிப் அழைத்துச் செல்ல உள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் காயமடைந்த பெண் யானை, ஆனைமலை அருகே உள்ள டாப்ஸ்லிப் அடுத்த வரகளியாரில் உள்ள யானைகள் முகாமிற்கு சிகிச்சைக்காக லாரி மூலம் நேற்று (மார்ச் 17) இரவு கொண்டு வரப்பட்டது. தற்போது பாதுகாப்பாக கிராலில் வைக்கப்பட்டுள்ள பெண் யானைக்கு, ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் வன கால்நடை மருத்துவர்களான விஜயராகவன், சுகுமாரன் மற்றும் சதாசிவம் ஆகியோரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காயம் குணம் ஆகும் வரை சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் பெண் யானை விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.