குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்... லான்செட் எச்சரிக்கை...

author img

By

Published : Aug 23, 2022, 8:04 PM IST

Young children are at increased risk of tomato flu, says Lancet study
Young children are at increased risk of tomato flu, says Lancet study ()

இந்தியாவில் குழந்தைகள் இடையே தக்காளி காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம் உள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மருத்துவ இதழான லான்செட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் தக்காளி காய்ச்சல் முதன்முதலாக கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பதிவானது. இதுவரை 82 குழந்தைகளுக்கு பதிவாகியுள்ளது. ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கு பதிவாகியுள்ளது. இந்த காய்ச்சல் காக்ஸ்சாக்கி ஏ 16 மற்றும் என்டிரோ 71 ஆகிய இரண்டு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. இதில் காக்ஸ்சாக்கி வைரஸ் மிதமான பாதிப்பையும், என்டிரோ வைரஸ் தீவிர பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடியது. இதனால் கை, கால், வாய் பகுதிகளில் சிறு கொப்புளங்கள் தோன்றும். காய்ச்சல், உடம்பு வலி, கை, கால் மூட்டுகள் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும். இந்த காய்ச்சல் சளி, கொப்பளங்களிலிருந்து வெளிவரும் நீர், மலம் உள்ளிட்டவை மூலம் பரவுகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே வேகமாக பரவிவருகிறது.

இதுகுறித்து சர்வதேச மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ள கட்டுரையில், "இந்தியாவில் குழந்தைகள் இடையே தக்காளி காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதன் மூலம் பெரியவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டயப்பர்கள் அதிக நேரம் கழிவுகளை தேக்கிவைக்கிறது. இதன் மூலம் காக்ஸ்சாக்கி மற்றும் என்டிரோ வைரஸ்கள் உருவாகின்றன. இதனால் தக்காளி காய்ச்சல் எளிதாக குழந்தைகளிடம் பரவிவிடுகிறது. இதுவே நர்சரி, பிரைமரி பள்ளிகளில் வேகமாக பரவும் அபாயத்தை கொண்டுள்ளது. அதோடு குழந்தைகளின் டயப்பர்களை கையாளும் பெரியவர்களுக்கும் எளிதில் பரவக்கூடும்.

ஆகவே சுத்தமாகவும் சுகாதாரமாகவும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு குழந்தைகளை டயப்பர்களுடன் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கலாம். குழந்தைகளின் டயப்பர்களை மாற்றியவுடன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கழிவறைக்கு சென்ற பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை பள்ளிகளுக்கோ அல்லது கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.