சென்னை: இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது. 45 வயதிலும் 25 வயதுடையவர் போல் ஜொலிக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது. வயதாகும் போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் நன்றாகத் தெரியும். வயதாக வயதாகத் தோலில் சுருக்கங்கள் ஏற்பட்டு, முகம் அழகை இழந்து விடும். இளமையான தோற்றத்தைப் பெறுவதற்காக அதிகப் பணம் செலவழித்து, க்ரீம்களையும், ட்ரீட்மெண்ட்களையும் கூடச் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல், நாள்தோறும் நாம் செய்யும் வேலைகளைச் சரி வரச் செய்தாலே போதும். 60 வயதிலும் 30 வயதுடையவராக இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். இளமையாகத் தோற்றம் அளிக்க, என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாமா!
தூக்கம் ரொம்ப முக்கியம்: போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலும் மூளையும் சோர்வடைந்து விடும். உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து, உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். ஸ்ட்ரஸ் ஹார்மோன் எனப்படும் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும். இதனால், தோலில் சுருக்கங்கள், நரை முடி போன்ற முதுமைக்கான அறிகுறிகள் தோன்றும். பெரியவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் வரையும், குழந்தைகள் 8 முதல் 12 நேரம் தூங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
No... சிகரெட்ஸ்: தற்போதைய காலத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் புகைபிடிக்கின்றனர். புகை பிடிப்பதால், மூளை பலவீனமாகிறது. இதனால், முதுமைக்கான அறிகுறிகள் விரைவில் தோன்றுகின்றன. புகை பிடிப்பதை நிறுத்தினால், உடல் நலப்பிரச்சினைகள் ஏதுவுமின்றி நலமாகவும், இளமையாகவும் வாழலாம்.
வெயிலில் செல்வதை தவிர்க்கவும்: வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது, சருமம் பொலிவிழந்து, முகத்தில் சுருக்கங்களும், கரும் புள்ளிகளும் தோன்றும். வெயிலில் செல்லும் போது SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை (Sun Screen) பயன்படுத்துவது நல்லது.
உடற்பயிற்சி அவசியம்: தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். இதனால் முதுமைக்கான செயல்முறை குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் சிறிது நேரம், யோகா மற்றும் தியானம் செய்வது அவசியமாகும். நோய்களையும் தடுக்க முடியும்.
மன அழுத்தம் வேண்டாமே: அதீத மன அழுத்தம் காரணமாக இளமையிலேயே முதுமை அடைவர். ஆகையினால், மன அழுத்தத்திலிருந்து விடுபடும் முயற்சியை எடுக்க வேண்டும். தினமும், 10 முதல் 20 நிமிடங்கள் தியானம் செய்தால் மன அழுத்தத்திலிருந்து விலக முடியும்.
சருமத்திற்கு ஈரப்பதம் தேவை: சருமத்தில் ஈரப்பதம் இல்லாவிட்டால் சருமம் வறண்டு, விரைவில் சுருக்கங்கள் ஏற்படும். ஆகையினால், அழகுக்கலை நிபுணர் அல்லது தோல் மருத்துவர் பரிந்துரையின் படி, மாய்ஸ்சுரைசர் (Moisturizer) மற்றும் லோசன் (Lotion) பயன்படுத்துவது நல்லது.
ஊட்டச்சத்து அவசியம்: இளமையாகத் தோற்றம் அளிக்க ஊட்டச்சத்துக்கள் தேவை. ஆகையினால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, முட்டை, கேரட், மீன், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
தினமும் 3 லிட்டர் நீர்: சரியான அளவு தண்ணீர் அருந்துவது சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே நேரத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் அருந்துவதைத் தவிர்த்து விட்டு, ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் அல்லது 2 டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது.
இந்த செயல்முறைகளைத் தவறாது கடைப்பிடித்து வந்தால் முதுமையைத் தள்ளிப்போட்டு, இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.
இதையும் படிங்க: அடிக்கடி முதுகு வலி ஏற்படுகிறதா? - என்ன காரணம் தெரியுமா?