குளிர்காலமானாலும் தேவையான அளவு தண்ணீர் குடிங்க...

author img

By

Published : Jan 19, 2023, 10:55 PM IST

குளிர்காலத்தில் கூட நீரிழப்பு பிரச்சனைகள் உண்டாகும்

கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் பருகும் மக்கள் குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் எற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹைதராபாத்: பொதுவாக கோடை காலத்தில் தான் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், வானிலை என்னவாக இருந்தாலும், மக்கள் எப்போதும் தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். எந்த பருவகாலத்திலும் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை அல்லது நீரிழப்பு சில நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, என பலகட்ட ஆய்வுகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது.

'லான்செட்' என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் உடலில் சோடியம் அளவு அதிகரிக்கிறது என்றும், அது லிட்டருக்கு 145 மில்லி என்ற வரம்பை மீறினால், ஒரு நபருக்கு அகால மரணம் ஏற்படும் வாய்ப்பு 21 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இது நாள்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

'நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், குளிர்காலத்தில் கூட நீரிழப்பு பிரச்சனை ஏற்படலாம் என்றும், கோடையில் ஏற்படும் அதே விளைவுகளைக் குளிர்காலத்தில் ஏற்படும் நீரிழப்பும் உடலில் ஏற்படுத்தும் என்றும் தெரியவந்துள்ளது.

மனித உடலில் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்து சுமார் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் அடங்கியுள்ளது. இதில், மூளையில் 85 சதவீதமும், எலும்புகளில் 22 சதவீதமும், தோல் பகுதியில் 20 சதவீதமும், தசைகளில் 75 சதவீதமும், ரத்தத்தில் 80 சதவீதமும், நுரையீரலில் 80 சதவீதமும் தண்ணீர் அடங்கியுள்ளது. இந்த உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக இருக்கவும், அவற்றின் வளர்ச்சி சரியாக நடைபெறவும், சரியாகச் செயல்படவும், தேவையான அளவு தண்ணீர் உடலில் இருக்க வேண்டும்.

நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றால், உடலின் மெட்டபாலிசம் அப்படியே இருக்கும், இதனால் பல பிரச்சனைகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இது தவிர, உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது சிறுநீர் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கிறது.

சரியாக தண்ணீர் பருகுவது உடலின் ஆக்ஸிஜன் சுழற்சி, வெப்பநிலை கட்டுப்பாடு, எலும்பு ஆரோக்கியம், உடலில் அத்தியாவசிய ரசாயனங்கள் மற்றும் ஹார்மோன்களின் உருவாக்கம் மற்றும் உறுப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதனால் தான், பருவம் பாராமல், தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

போபாலைச் சேர்ந்த பொது மருத்துவர் டாக்டர் ராஜேஷ் ஷர்மா கூறுகையில்: நமது உணவு மற்றும் குடிப்பழக்கங்கள் பருவத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. கோடை காலத்தில் அதிக தாகம் எடுப்பதால், மக்களின் உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்து கொள்கின்றனர். ஆனால் குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக அதிக தாகத்தை உணர மாட்டார்கள், இதன் விளைவாக, பெரும்பாலான மக்கள் திரவ நிலையில் உள்ள உணவு பொருட்களை அதிகம் தவிர்க்கின்றனர்.

குளிர்காலத்தில் தாகம் குறைவாக இருந்தால், உடலின் தண்ணீரின் தேவையும் குறைகிறது என்று அர்த்தம் இல்லை என்று அவர் விளக்குகிறார். மற்ற பருவங்களைப் போலவே இந்த பருவத்திலும் உடலுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் தான் குளிர்காலத்தில் குறைந்த அளவு தண்ணீர் அல்லது திரவங்களை உட்கொள்வது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு அல்லது வேறு ஏதேனும் நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்களுக்குத் தண்ணீர் பற்றாக்குறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது தவிர, நீண்ட காலமாக ஏற்படும் நீரிழப்பு பிரச்சனை குறைந்த இரத்த அழுத்தம், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான அமைப்பு பிரச்சனைகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI), சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வயதிலும் உடலில் நீர் குறைபாட்டின் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், சில சமயங்களில் அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும் என்று டாக்டர் ராஜேஷ் விளக்குகிறார். குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை வாய் மற்றும் நாக்கு வறட்சி, அழும்போது கண்ணீர் குறைதல் மற்றும் சிறுநீர் கழிப்பது குறைவது போன்றவை மூலம் காணலாம் என்றார்.

இதையும் படிங்க: ரத்தப் புற்றுநோய் நோயாளிகளையும் காப்பாற்றும் கோவிட் தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.