குழந்தைகளை பராமரிப்பதில் சிக்கலா- டிப்ஸ் இதோ

author img

By

Published : Aug 20, 2021, 2:39 PM IST

Updated : Aug 30, 2021, 7:03 PM IST

Tips For Good Parenting

இன்றையச் சூழலில் பணிச்சுமை காரணமாக குழந்தைகளை பராமரிக்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். குழந்தைகளை சற்று நேர்மறையான நபர்களாக வளர்க்கவும், பண்புள்ளவர்களாக மாற்றவும் சில டிப்ஸ்களை உங்களுக்காக எடுத்துவந்திருக்கிறோம்.

தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்லும் காலத்தில் குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. ஆனால் பொறுமை, ஒற்றுமையுடன் செயல்பட்டால், குழந்தைகளை நல்ல பழக்கங்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க முடியும்.

முந்தைய காலத்தில் கூட்டுக் குடும்பங்களில் குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் தாய், தந்தை பராமரிப்பு மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களின் பராமரிப்பிலும் வளருவார்கள். தற்போது சிறு குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளை தற்போதைய காலத்தில் இருக்கும் பெற்றோர் வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக்கொடுக்க கடினப்படுகின்றனர்.

குழந்தைகள் பெற்றோர் சொல்லிக் கொடுக்கும் விஷயங்களுக்கு மாறாக பெற்றோரை பார்த்து அதன்படி நடக்கிறார்கள் என மூத்த மனநல மருத்துவர் வீணா கிருஷ்ணன் கூறுகிறார். இந்தச் சூழ்நிலையில் குழந்தைகள் முன் பெற்றோர் பாசிட்டிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார். அப்போதுதான் குழந்தைகள் நல்ல குழந்தைப்பருவத்தை அனுபவிப்பார்கள்.

இன்னும் பல வழிகளில் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்கலாம். அதற்கான சில டிப்ஸ்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1. பெற்றோர் வீட்டின் சூழ்நிலையை எப்போதும் பாசிட்டிவாகவும், இனிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான சூழலில் குழந்தை மகிழ்ச்சி, மரியாதை, பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

2. குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிடுங்கள். அவர்களுடன் பேசுங்கள், அதைவிட முக்கியமாக அவர்கள் கூறுவதை கவனமுடன் கேளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைக்குமிடையிலான பந்தத்தையும், உறவையும் வலுப்படுத்தும்.

3. உங்கள் குழந்தைகளின் நல்ல, நேர்மறையான நடத்தையை கவனத்தில் கொண்டு அவ்வப்போது பாராட்டுங்கள். குழந்தை ஏதாவது தவறு செய்துவிட்டு அதற்காக நீங்கள் கண்டித்தீர்கள் என்றால் மீண்டும் அந்தத் தவறை குழந்தை செய்யும் வாய்ப்பு உள்ளது. குழந்தையை திட்டுவதற்கு பதிலாக அவர்களது நல்லது, கெட்டது எது என விளக்குங்கள்.

எனினும் திட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குழந்தையை கண்டிப்பதை தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற சூழலில் குழந்தையை தகாத வார்த்தை கொண்டு பேசுவதோ, அடிப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.

Tips For Good Parenting
குழந்தையிடம் காரணமின்றி கண்டிப்புடன் நடந்துகொள்ளாதீர்கள்

4. பகிர்ந்துகொள்ளும் பழக்கம் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு அவசியமாகக் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கு எடுத்துச் செல்லும் சிற்றுண்டி, கற்கும் பொருள்கள், புத்தகங்கள் என அனைத்திலும் பகிர்தலை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் ஆளுமைத்தன்மையில் அவர்களை சிறந்து விளங்கச் செய்யும்.

5. பெரும்பாலும் வேலை இடத்தில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெற்றோர் தங்களின் கட்டுப்பாட்டை இழந்து, தங்களை அறியாமலே குழந்தைகள் மீது தங்களது விரக்தியை காட்டும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது சரியான போக்கல்ல. இந்த நடத்தை குழந்தைகளை பெரிதளவில் பாதிக்கும்.

இதுவே அவர்கள் பிற்காலத்தில் பிடிவாத குணமுடையவர்களாக மாறும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதன் பிறகு குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தூரமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.

6. குழந்தைகளிடத்தில் கோபமாகப் பேசுவதையோ, கத்துவதையோ தவிருங்கள். அவர்களிடத்தில் ஏதேனும் விளக்க வேண்டும் என விரும்பினால் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து அவர்கள் கண்ணோட்டத்தை கேளுங்கள். அதன் பிறகு எது சரி தவறு என எடுத்துக்கூறுங்கள்.

7. உங்கள் குழந்தை பொறுப்பான நபராக வளர வேண்டும் என விரும்பினால், அதற்கு அவர்களை இன்றிலிருந்தே ஆயத்தப்படுத்துங்கள். வீட்டில் சிறிய சிறிய வேலைகளில் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். வீட்டின் சில பொது காரியங்களில் முடிவு எடுக்கும்போது அவர்களின் கருத்துகளை கேளுங்கள்.

Tips For Good Parenting
வீட்டு வேலைகளில் உதவ பழக்கப்படுத்துங்கள்

இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அப்போது அவர்கள் தன்னம்பிக்கையுடையவர்களாகவும் தற்சார்புடையவர்களாகவும் மாறுவார்கள்.

8. உங்கள் பிள்ளைகள் ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்களாகவே கற்றுக்கொள்ளட்டும். ஆரம்பத்தில் அவர்களால் அதைச் சரியாகச் செய்ய முடியாமல் போகலாம், ஆனால் படிப்படியாக அவர்கள் தானே கற்றுக்கொள்வார்கள்.

9. சவால்களை நேர்மறையாக எதிர்கொள்ள உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள். தங்களது சவால்களை நேர்மறையாக சந்திக்கும் நபர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்மறையான மனநிலையோடு இருப்பவர்கள் சவால்களை சந்திக்காமல் ஒரு காரியத்தை முன்பே கைவிடுவார்கள்.

10. குழந்தைகள் மீது செலுத்தப்படும் அதிகக் கட்டுப்பாடு அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே, பெற்றோர் குழந்தைகளுக்கு நண்பர்களாக, வழிகாட்டியாக இருக்க முயல வேண்டும். அவர்கள் உங்களைப்போல் ஆக்க முயற்சிக்காமல், அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள். அவர்கள் இருப்பதை போலவே அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: நீண்ட நேரம் பணி செய்வது இதயத்தைப் பாதிக்குமா?

Last Updated :Aug 30, 2021, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.