ETV Bharat / state

அரசின் வலிமை சிமென்ட் 59ஆயிரம் டன் விற்பனை - அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : May 3, 2022, 6:25 PM IST

அரசின் வலிமை சிமெண்ட் 59 ஆயிரம் டன் விற்பனை
அரசின் வலிமை சிமெண்ட் 59 ஆயிரம் டன் விற்பனை

ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை பார்வையிட்ட பின், தமிழ்நாடு அரசின் வலிமை சிமென்ட் 59 ஆயிரம் டன் விற்பனை நடைபெற்றுள்ளது என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட உள்ள புதிய நவீன அரவை இயந்திரம் அமைய உள்ள இடத்தை அந்த ஆலை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மேலாண்மை இயக்குநர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் கிளிங்கர் வளாகம், வலிமை சிமென்ட் பேக்கிங் மற்றும் சிமென்ட் மில் அரவை இயங்குதலை பார்வையிட்டு, ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலை 1970ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

தென்மாவட்ட சிமென்ட் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்த ஆலை காலப்போக்கில் தாராளமயமாக்கல் கொள்கை அடிப்படையில் தனியாருக்குச் சமமாக, ஈரப்பத தொழில்நுட்ப முறையிலிருந்து உலர்பத தொழில் நுட்பத்திற்கு மாற முடியாமல் இருந்தது. அதனால் தனியார் சிமென்டுக்கு இணையாக சந்தையில் விற்பனை செய்ய முடியாமல் இருந்தது. தொடர்ந்து ஆலையை நவீனப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது ஆலையின் செயல்பாட்டை உறுதிசெய்யும் பொருட்டு அரியலூர் அரசு சிமென்ட் ஆலையிலிருந்து கிளிங்கர் கொள்முதல் செய்து, சிமென்ட் உற்பத்தி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆலையில் உள்ள இரண்டு சிமென்ட் அரவை இயந்திரங்கள் மிகப்பழமையான காரணத்தால் அதிக அளவில் பராமரிப்புப் பணி செய்யப்படுகின்றன.

எனவே, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெருமளவில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான அதிக அளவிலான சிமென்ட் தேவையினைக் கருத்தில் கொண்டு ஆலங்குளம் சிமெண்ட் ஆலை வளாகத்தில் மணிக்கு 80 மெட்ரிக் டன் திறனுடைய புதிய சிமென்ட் அரவை இயந்திரம் கட்டமைப்பு வசதிகளுடன் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணி 10 மாதங்களில் நிறைவு பெறும்.

அரசின் வலிமை சிமெண்ட் 59 ஆயிரம் டன் விற்பனை

இப்பணி நிறைவு பெறும் பட்சத்தில் ஆண்டுக்கு சிமென்ட் உற்பத்தி திறன் 2.75 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 5.6 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதன் மூலம் நேரடியாக 60 நிரந்தரப்பணிகளும் 500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்த இயலும்’ என்றார்.

மேலும் வலிமை சிமென்ட்டிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், இதுவரை 59 ஆயிரம் டன் விற்பனை ஆனதாகவும் தற்போது நாளொன்றுக்கு 25 ஆயிரம் டன் வலிமை சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசுகையில், 'சாத்தூர் அருகில் உள்ள ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலை மேம்படுத்தப்படும். வலிமை சிமென்ட், இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும்’ என்றார்.

இதையும் படிங்க: 21 தலைமுறைக்கும் புண்ணியம் வேண்டுமா ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.