வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பியபோது நடந்த அகோர விபத்து; இருவர் பலி

author img

By

Published : Jan 22, 2023, 7:56 PM IST

விழுப்புரத்தில் சாலையோர பாதுகாப்பு தடுப்பில் பாய்ந்த வேன்; இருவர் பலி..!

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களை அழைத்துக்கொண்டு பயணித்த டெம்போ வேன் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: புதுவை மற்றும் விழுப்புரம் எல்லையையொட்டி அமைந்துள்ள வானூர் அருகே சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர், சுஜாதா, மற்றும் சுகந்தன் ஆகியோர். இந்நிலையில் இதே பகுதியைச்சேர்ந்த இவர்களின் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய ஆறு பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று(ஜன.22) தங்களுடைய சொந்த ஊருக்கு வருவதாகத் தகவல் அளித்திருந்தனர்.

எனவே, பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்களை ஊருக்கு அழைத்து வருவதற்காக, இவர்கள் மூவரும் டெம்போ டிராவலர் (மினி வேன்) மூலமாக நேற்று இரவு சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். மேற்கண்ட வாகனத்தை புதுவை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் இயக்கியுள்ளார்.

மேலும் இன்று காலை விக்டர் சுரேஷ், விக்னேஷ்வரன், அலுயன், தமிழரசி, வினோதினி, பெண் குழந்தை உட்பட ஆறு பேர் கொண்ட குழு விமானம் மூலமாக சென்னை வந்துள்ளனர். இந்த 10 பேரும் புதுச்சேரியை நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 12:30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், கேணிப்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலை தடுமாறிய டெம்போ ட்ராவலர் மினி வேன் வாகனம் நெடுஞ்சாலையின் இடப்புறமாகப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் அதிவேகமாக மோதியிருக்கிறது.

இதில் அந்தத் தகர தடுப்பு, வாகனத்தில் முன் பகுதியிலிருந்து கிழித்துக்கொண்டு பின் பகுதியைத் தாண்டி சென்றிருக்கிறது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், விக்டர் சுரேஷ் மற்றும் அவருடைய உறவினர் மகளான ஒன்றரை வயது பெண் குழந்தை இறந்ததாகவும் இச்சம்பவத்தில் ஒருவருக்கு கால் பறிபோகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களை அழைத்துக்கொண்டு பயணித்தபோது, வாகனம் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோவை குண்டுவெடிப்பு; கைதான நபர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.