ETV Bharat / state

மரக்காணம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் விடுதலை!

author img

By

Published : Apr 22, 2022, 11:06 PM IST

கடந்த 2013இல் நடந்த மரக்காணம் கலவரத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மரக்காணம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் விடுதலை
மரக்காணம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் விடுதலை

விழுப்புரம்: வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா மாநாடு கடந்த 23.04.2013அன்று மகாபலிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து வன்னிய மற்றும் பாமகவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மகாபலிபுரத்திற்குச் சென்றுகொண்டிருந்தனர். அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச்சேர்ந்தவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரைச்சாலை வழியாக மகாபலிபுரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர்.

வாய்த்தகராறில் ஆரம்பித்த கலவரம்: அப்பொழுது மரக்காணம் கட்டையன் தெருவைச்சேர்ந்த சிலருக்கும், இளைஞர் சங்க மாநாட்டிற்குச்சென்ற பாமக தொண்டர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடி மற்றும் ரகளை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்டையன் தெருவைச்சேர்ந்தவர்கள் மரக்காணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் நின்றிருந்த அரசுப்பேருந்துகளையும், தனியார் பேருந்துகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தினர்.

இதனால் சுமார் பத்திற்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகள் எரிந்து சாம்பலானது. இந்த கலவரத்தில் பாமக தொண்டர்களான அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் கும்பகோணத்தைச்சேர்ந்த வினோத்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இதில் அரசு பேருந்துகளைக் கொளுத்தியது தொடர்பான சம்பவம் குறித்து மரக்காணம் காவல் துறையினர் 200 பாமக நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மரக்காணம் கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேர் விடுதலை!

20 பேர் விடுதலை: இதைத்தொடர்ந்து, இறுதியாக 34 நபர்களின் மீது வழக்குப்பதியப்பட்டு இந்த வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண்-2 நீதிபதி சுதா முன்பு நடைபெற்றுவந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் இன்று(ஏப்.22) குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தீர்ப்பு வழங்கி ஜெயசங்கர், மாணிக்கம், கலையரசன், குமரன், சந்தனகுமார், ராஜா, குமார், வேல்முருகன், ரவி, ராஜசேகரன், சண்முகம், சுப்பிரமணி, ராம்குமார்,ஆனந்தன், சங்கர், சின்னத்தம்பி, சசிகுமார், ராமதாஸ், ராஜாராமன், செழியன் ஆகிய 20 நபர்களை விடுதலை செய்தார். பாமக தரப்பு வழக்கறிஞராக வக்கீல் பாலாஜி ஆஜரானார்.

இதையும் படிங்க: ‘திமுகவின் அடக்குமுறைக்கு பாஜக பணிந்து போகாது’ - பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.