ETV Bharat / state

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி விவகாரம்: ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கிய வேல்முருகன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:25 PM IST

Updated : Aug 26, 2023, 1:48 PM IST

toll booth issue
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி விவகாரம்

Velmurugan strict actions against toll gate officials: விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல் முருகன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆய்வு

விழுப்புரம்: அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஆக.24) ஆய்வு மேற்கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், சட்டமன்ற அரசு உறுதிமொழி குழுவின் தலைவருமான வேல் முருகன் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டார்.

அதை முடித்த பின்னர் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

அந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், குழு உறுப்பினர்களான மோகன், ராமலிங்கம், அருள், ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான புகழேந்தி, லக்ஷ்மணன், சிவக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி (IAS) கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜய், துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், பேரவைச் செயலாளர், பேரவை துணைச் செயலாளர், பிரிவு அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் புதியபேருந்து நிலையம் வீடுர் அணை, திண்டிவனம், கூட்டேரிப்பட்டு பகுதிகளில் முடிவுற்ற, முடிவுறா பணிகளை ஆய்வு செய்தனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக வீடுர் அணையில் தூர் வாரப்பட்ட பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது சுங்கச்சாவடியில் வேல் முருகன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது சென்ற ஆண்டு பொது கணக்கு குழு சார்பில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு 24 மணி நேரமும் இலவசமாக செல்லக்கூடிய வகையில் ஒரு பாதையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற விதியின்படி அது இங்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்று வரையில் அந்த உத்தரவு நடைமுறைப் படுத்தப்படவில்லை.

இந்த நிலையில், நேற்று அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆய்வின் போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மீண்டும் ஆய்வு செய்து மேற்கண்ட உத்தரவுகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடுமையான உத்தரவுகளை குழு சார்பில் பிறப்பித்ததோடு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் பணம் யாருக்கு செல்கிறது என வினா எழுப்பினார்.

மேலும் சுங்கச்சாவடியில் உள்ளூர் ஆட்களை பணிக்கு அமர்த்தாமல் இந்தி தெரிந்தவர்களை பணிக்கு அமர்த்துகிறீர்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாஸ் கேட்பது, வாகனங்களில் ஆட்கள் இருக்கிறார்களா என ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும். செய்தியாளர்கள் இலவசமாக சுங்கச்சாவடி கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

விக்கிரவாண்டி பகுதியில் இருக்கும் உள்ளூர் நபர்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். அரசு நடத்தும் சுங்கச்சாவடியிலேயே இந்த நிலை என்றால் தனியார் ஏன் கொள்ளையடிக்க மாட்டார்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார். விவசாயிகளிடம் இருந்து கட்டணத்தை வசூல் செய்து மத்திய அரசிடம் கொடுத்து என்ன சாதனை செய்ய போகிறீர்கள் என தெரியவில்லை என கடுமையான சாடினார்.

எத்தனைமுறை சொன்னாலும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிர்வாகம் கேட்பதில்லை என கடிந்துக்கொண்டார். மேலும் இரவு நேரங்களில் உறங்கும் சுங்கச்சாவடி ஊழியர்களை எழுப்பி அவர்களை முறையாக பணி செய்ய சொல்லுங்கள் எனவும் எச்சரித்தார்.

இதையும் படிங்க: Aiadmk Case: பொதுக்குழு வழக்கில் ஈபிஎஸ் மீண்டும் வெற்றி.. தீர்ப்பின் முழு விபரம், ஓபிஎஸ் பதில் என்ன?

Last Updated :Aug 26, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.