ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் ; கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு!

author img

By

Published : Jul 28, 2022, 1:29 PM IST

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த வழக்கில், கைதான தாளாளர் உள்ளிட்ட 5 பேல் ஜாமீன் கோரி விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம்: கடந்த 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சேலம் மத்திய சிறையில் இருந்து சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பலத்த பாதுகாப்புடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் கைதான 5 பேர் ஜாமீன் கோரி மனு

இம்மனு மீதான விசாரணை பகல் 12 மணிக்கு நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் ஒரு நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கும்படி அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து மீண்டும் இன்று பகல் 12 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, விழுப்புரம் கோர்ட்டில் இருந்து ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர்.

அங்கு அவர்கள் 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் முண்டியம்பாக்கத்தில் இருந்து அவர்களை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச்சென்று அவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி ஸ்ரீமதி எந்த கல்வியாண்டு முதல் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார், அவர் எந்த ஆண்டில் இருந்து பள்ளி விடுதியில் சேர்ந்தார், அந்த விடுதியில் ஸ்ரீமதியுடன் தங்கிய சக மாணவிகள் யார், யார்?, மாணவி ஸ்ரீமதிக்கு வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணம், விடுதி கட்டணம் எவ்வளவு? ஸ்ரீமதி இறந்ததாக கூறப்படும் நாளைக்கு முந்தைய நாளான அதாவது கடந்த 12-ஆம் தேதியன்று பள்ளியில் சிறப்பு வகுப்புகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? எந்த நேரத்திற்கு சிறப்பு வகுப்பு முடிந்தது, பள்ளியின் 3-வது மாடியில் ஏன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவில்லை? என்று பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் 5 பேரும் உரிய பதில் அளித்ததாகவும். ஒரு சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 24 மணி நேரம் விசாரணை செய்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டும் 10 மணி நேரத்திற்குள் விசாரணையை முடித்து நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி படுத்தி, இரவோடு இரவாக அவர்களை சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தாளாளர் உட்பட ஐந்து நபர்கள் பிணை விடுவிப்பு (ஜாமின்) கோரி நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் அதனை தள்ளுபடி செய்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று மீண்டும் விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் பிணை விடுப்பு (ஜாமின்) கோரி அவர்கள் வழக்கறிஞர் ராமச்சந்திரன மனு அளித்துள்ளார்.

மனு தொடர்பான வழக்கு நாளை விழுப்புரம் மகிளா நீதிமன்ற நீதிபதி சாந்தி (பொறுப்பு) அமர்வு விசாரணை மேற்கொள்கிறது.

இதையும் படிங்க: கீழச்சேரி பள்ளியில் மாணவி தற்கொலை;தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.