ETV Bharat / state

கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து பெண் உயிரிழப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! ரூ.2 லட்சம் நிதிஉதவி அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 9:34 AM IST

கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து உயிரிழப்பு.. குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
சியாமளா(கோப்புப்படம்)

கண்டமங்கலம் அருகே கழிவுநீர் கலந்த சுகாதாரமற்ற குடிநீரை அருந்தி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

விழுப்புரம்: கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் கிராமத்தில் கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த நவமால்மருதுார் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புளியந்தோப்பு வழியே செல்லும் கழிவுநீர் கால்வாய், 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இந்த கால்வாய் நடுவே பிரதான குடிநீர் குழாய் செல்கிறது.

இந்நிலையில், குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் கடந்த 7 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தமிழேந்தி, சியாமளா, சுப்பையா, ஜமுனா, பிரபு உட்பட 20 க்கும் மேற்பட்டோர் ஜிப்மர், முண்டியம்பாக்கம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குடிநீரில் கழிவுநீர் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்ட நிலையில், டேங்கர் லாரி மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கால்வாய் நடுவே செல்லும் குடிநீர் குழாயை அகற்றி வேறு பாதையில் பதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்தார்.

மேலும், அமைச்சரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அமைச்சர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். நவமால் மருதூர் ஊராட்சி செயலாளர் வாசுதேவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சியாமளா (வயது 40) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த சியமளாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிட்டப்பட்டு உள்ள அறிக்கையில், "கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், நவமால்மருதூர் ஊராட்சி லெனின் நகர்ப் பகுதியில் அசுத்தமான குடிநீரை அருந்தியதால் அப்பகுதியைச் சேர்ந்த மற்றும் அங்கு நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள வெளியூரிலிருந்து வருகை புரிந்திருந்தவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

  • விழுப்புரம் மாவட்டம், நவமால்மருதூரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/dy3hN4IO5x

    — CMOTamilNadu (@CMOTamilnadu) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டம் செல்வன்குப்பம் பகுதியைச் சேர்ந்த சியாமளா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த சியாமளாவின் கணவர் மற்றும் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Seeman : "சட்டப்படினாலும் சரி.. அரசியல் ரீதியினாலும் சரி சந்திக்கலாம்.. நான் ரெடி" - சீமான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.