ETV Bharat / state

ஒலக்கூர் பி.டி.ஓ அலுவலகம் முன்பு அல்வா விற்பனை; சுயேட்சை கவுன்சிலர்கள் நூதன போராட்டம்!

author img

By

Published : Feb 11, 2023, 7:15 AM IST

கவுன்சிலர்கள் போராட்டம்
கவுன்சிலர்கள் போராட்டம்

ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சுயேட்சை கவுன்சிலர்கள் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அல்வா வியாபாரம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்

விழுப்புரம்: திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுயேட்சை கவுன்சிலர்களாக இருப்பவர்கள் நொளம்பூர் எழிலரசன், கீழ்கூடலூர் பூங்கொடி இவர்கள் இருவரும் கடந்த 9ஆம் தேதியன்று ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அல்வா விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax GST) உள்பட ஒரு கிலோ அல்வா 100 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக பலகை வைத்தனர். இது பற்றி அறிந்ததும் பலர் முந்தியடித்துக்கொண்டு வந்து அல்வா வாங்கிச் சென்றனர்.

இது குறித்து பேசிய கவுன்சிலர் எழிலரசன் "நொளம்பூர் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை ஒலக்கூர் ஒன்றியக்குழு தலைவர் தனக்கு வழங்கினார். ஆனால் பணியைச் செய்ய விடாமல் சிலர் தடுத்து வருகிறார்கள், கட்டிடத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.

மேலும், நொளம்பூர் ஏரியில் பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்படுவதையும் ஒரு சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தடுத்து நிறுத்தினர். மக்களுக்கு எந்த ஒரு நலத் திட்ட உதவிகள் செய்தாலும், அதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை” என்றார்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஒலக்கூர் போலீசார், போராட்டம் நடத்திய கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து களைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: டேபிள் போச்சே... கோபத்தில் கண்ணாடி மேசையை உடைத்த சார் ஆட்சியர்... நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.