ETV Bharat / state

"மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயில வேண்டும்" - வேலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 8:22 AM IST

Updated : Nov 29, 2023, 1:18 PM IST

"மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயில வேண்டும்" - வேலூர் ஆட்சியர் மாணவர்களுக்கு வலியுறுத்தல்!
"மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயில வேண்டும்" - வேலூர் ஆட்சியர் மாணவர்களுக்கு வலியுறுத்தல்!

Vellore Peenjamandai: மலைக்கிராம மாணவர்கள் வெளியூர் சென்று உயர்கல்வி பயிலுவதுடன், அதன் மூலம் நல்ல வேலைவாய்ப்பையும் பெற்றிட வேண்டும், அப்போதுதான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டின் அறிவுறுத்தியுள்ளார்.

வேலூர்: அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலைக் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.4.50 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 4 அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று (நவ.28) திறந்து வைத்தார்.

பின்னர், பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலை கிராம மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் கல்வி உதவித் தொகையையும், அரசுப் பள்ளிகளில் பயிலும் 125 மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் கல்வி சார் உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

மேலும், அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 70 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பில் கல்வி சார்ந்த உபகரணங்கள், ரூ.34 ஆயிரத்து 500 மதிப்பில் அங்கன்வாடி மையங்களுக்கான பாத்திரங்கள் மற்றும் ரூ.73 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார்.

பின்னர், மாணவர்களிடம் பேசிய ஆட்சியர், “தமிழக முதலமைச்சர் மலை கிராமங்களுக்குத் தேவையான சாலை, குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீஞ்சமந்தை கிராமத்துக்கு நான் முதன் முதலில் வந்தபோது, சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமமாக இருந்தது.

ஆனால், இப்பகுதி மக்கள் காலம் காலமாக சாலை வசதி இல்லாத இந்த மலைப்பகுதியில் இருந்து, தங்களது பல்வேறு தேவைகளுக்காக மிகவும் சிரமத்தோடு கீழே இறங்கி பயணித்து வந்தனர். சில நேரங்களில் மருத்துவ சிகிச்சைகளுக்காக உடனடியாக செல்ல முடியாமல் உயிரிழப்புகூட ஏற்பட்டிருக்கலாம்.

பொதுமக்களின் இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசின் சார்பில் உடனடியாக இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தரமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்படும் இடங்களில், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மலைக் கிராமங்களில் வாழும் மக்கள் கறவை மாடுகளை வாங்கி சுயதொழில் புரிய கடனுதவி வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அதில், பீஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த 386 பேருக்கு கறவை மாடுகள் வாங்க கடனுதவி வழங்குவதற்காக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களும் கறவை மாடுகளை வாங்கி, சுய தொழில் செய்வதற்காக கடனுதவி கேட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையும் விரைந்து எடுக்கப்படும். மலைக்கிராமங்களில் பள்ளிக்கல்வி முடித்து மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்காக வெளியூர்களுக்குச் சென்று உயர்கல்வி படிக்க வேண்டும்.

மலை கிராம மக்கள் தங்களது உள்ளூர் தொழில்களை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால், உயர்கல்வி படித்து நல்ல ஒரு வேலை வாய்ப்பை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கு அரசின் சார்பில் தற்போது வங்கிகளுடன் இணைந்து துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாணவ, மாணவிகள் தங்களுடைய பெற்றோரின் சுமைகளைக் குறைக்கும் வகையில், அரசின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களை பயன்படுத்தி கல்விக் கடன்களை பெற்றுக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படித்து நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொண்டால், உங்களது எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும்.

மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் கொய்யா, சீதாப்பழம், சிறுதானிய உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதற்கும், அரசின் சார்பில் உதவிகள் வழங்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பீஞ்சமந்தை, அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்காக பீஞ்சமந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேலும் ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கு அமைந்துள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்டும் பணியும் நடைபெற உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக 24 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு, தனியார் பங்களிப்புடன் சிறப்பாக கட்டப்பட உள்ளது.

பீஞ்சமந்தை மலை கிராமத்தில் படிக்கும் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு ஒடுகத்தூருக்குச் சென்று வருகின்றனர். அவர்களுக்கு இங்கேயே தேர்வு எழுத வசதி வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழுத் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: “விரைவில் படம் வெளியாகும்”- துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் உருக்கம்!

Last Updated :Nov 29, 2023, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.