உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டி - தொல்.திருமாவளவன்

author img

By

Published : Sep 22, 2021, 7:02 AM IST

உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்

உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வேலூர்: காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர்யா (17). இவர் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (செப்.21) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் இதுவரை 17 பேரை பறிகொடுத்துள்ளோம். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் விலக்களிக்கக் கூடாது எஎன ஒன்றிய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்விற்கு எதிரான மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதுதொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தொடர்பான கருத்து பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வது, சமூகநீதி எழுச்சி மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்து இருக்கிறோம். அந்தப் பரப்புரைக்குப் பின்னர் பெரிய அளவில் முதலமைச்சர் பங்கேற்கும் வகையிலான போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் விசிக தனி சின்னத்தில் போட்டியிடும்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அண்மையில் நீட் தேர்வினால் உயிரிழந்த கனிமொழி என்ற மாணவியின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்திருந்தோம். அதேபோல, தற்போது சௌந்தர்யாவின் குடும்பத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளோம். மேலும் சேலத்தில் உயிரிழந்த தனுஷ் என்ற மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றோம்.

திமுக அல்லாமல், திமுக தலைமையிலான கூட்டணியில் 8-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. ஆகவே எல்லா கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும், வெற்றி வாய்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் ஒரு அளவுகோலாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாளை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், கிட்டத்தட்ட 90 விழுக்காடு பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இடங்களும், தொகுதிகளும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஒரு நல்லிணக்கமான முறையிலே பேச்சுவார்த்தை முடிந்து இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆகவே கிடைத்த இடங்களில் தனி சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள அல்லது அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களில் பானை சின்னம் இல்லை. ஆகவே மாநில தேர்தல் ஆணையத்தின் பட்டியலிலுள்ள சின்னத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் தென்னை மர சின்னத்திலும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் கைக்கடிகார சின்னத்திலும் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த பன்னீர் செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.