'அனைத்து சமுதாயத்தினருக்கும் பாடுபடுவேன்' - தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள்

author img

By

Published : Sep 24, 2021, 6:32 PM IST

தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள்

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள், தேர்தலில் வெற்றி பெற்று அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள் பணியாற்றுவேன் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

வேலூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சே.கு. தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி சார்பில் திருநங்கையான பாண்டியம்மாள் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டு தற்போது அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் உற்சாகமாக வாக்கு சேகரிக்கும் பணியில் இருக்கும் அவர், ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், " திருநங்கை என்பதால் எங்கு சென்றாலும் அவமதிக்கின்றனர். திருநங்கைகளுக்கான அரசாங்கத்தினுடைய எந்த ஒரு திட்டமும் சமூக நலத்துறையின் மூலமாக முறையாக எங்களுக்கு வந்து சேர்வது இல்லை.

பிரபல கட்சிகள் வாய்ப்பளிக்க மறுப்பு

அனைத்தையும் போராடிப் பெற வேண்டிய சூழல்தான் இருக்கிறது. திருநங்கை என்கிற காரணத்தினால் எங்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மறுக்கின்றனர். இவையெல்லாம் எங்களை மிகவும் அவமதிப்பது போன்று உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள்
தேர்தலில் போட்டியிடும் திருநங்கை பாண்டியம்மாள்

இந்த தேர்தலின் மூலம் திருநங்கைகள், பெண்கள் சமுதாயத்தினருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகளை அணுகி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, சே. கு. தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறேன்.

ஏனைய பாலினத்தாரிடம் இருந்து உங்களுக்கு வரவேற்பு உள்ளதா?

பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. நேரில் சென்று பேசினேன். தேர்தலில் நீங்களே போட்டியிடுங்கள் என்று கூறி ஆதரவு தந்தார்கள்.

மேலும் இந்த வாய்ப்பை நல்வாய்ப்பாக கருதி தேர்தலில் வெற்றிபெற்று திருநங்கை சமுதாயத்திற்காக மட்டுமின்றி அனைத்து சமுதாயத்திற்காகவும் மக்கள் பணியாற்றுவேன்" என்றார்.

இதையும் படிங்க: அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.