ETV Bharat / state

வேலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.. குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 7:29 PM IST

வேலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை
வேலூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை

வேலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, மாநகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

வேலூர்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தேங்கியது. மாநகரின் முக்கிய சாலைகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறுபோல் ஓடியது. பலத்த மழை காரணமாக புதிய பேருந்து நிலையம், கிரீன் சர்க்கிள், காமராஜர் சிலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல், சேண்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு, கன்சால்பேட்டை, இந்திரா நகர், திடீர் நகர், முள்ளிப்பாளையம், தோட்டப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியது. சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், திருவலம், பொன்னை, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், ஆற்காடு, வாலாஜா, காவேரிப்பாக்கம், பொன்னை உள்ளிட்ட பகுதிகளிலும் மழையானது வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்துள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலையங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அதனையொட்டி உள்ள செதுவாலை, கந்தனேரி உள்ளிட்ட ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் உள்ள 9 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேலும், வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி காட்பாடியில் அதிகபட்சமாக 58 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் அணைக்கட்டில் 23 மி.மீ, குடியாத்தம் 13.20 மி.மீ, மேல்ஆலத்தூர் 14மி.மீ, மோர்தானா அணை 5 மி.மீ, ராஜாதோப்பு அணை 24 மி.மீ, கே.வி.குப்பம் 47.40 மி.மீ, பொன்னை 52.80 மி.மீ, வேலூர் சர்க்கரை ஆலை 36.80 மி.மீ, வேலூர் ஆட்சியர் அலுவலகம் 48 மி.மீ, மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் ஒரு யோகி - யார் இந்த மகந்த் பாலக்நாத்? முதலமைச்சராவாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.