ETV Bharat / state

’சித்த மருத்துவத்தால் குணமாகும் கரோனா’ - சர்வதேச ஆய்விதழில் வெளியான முதல் ஆய்வு

author img

By

Published : Aug 2, 2021, 11:13 AM IST

Updated : Aug 2, 2021, 12:14 PM IST

கரோனா சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து வேலூர் மாவட்ட சித்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழில் பிரசுரமாகியுள்ளது.

corona cured by siddha medicine
சர்வதேச ஆய்விதழில் வெளியான முதல் ஆய்வு

வேலூர்: இந்தியாவின் பழம்பெரும் வைத்திய முறைகளில் ஒன்று தமிழர்களின் சித்த மருத்துவ முறை. பக்கவிளைவுகளற்ற இந்த மருத்துவ முறையை இந்தியாவில், கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டபோது, அதிலிருந்து தற்காத்துக் கொள்ள சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீரை பரிந்துரை செய்தனர்.

இதன் பயனை அறிந்துகொண்ட ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீரை ஆங்கில மருந்துகளோடு சேர்த்து அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்தது.

சித்த மருத்துவத்தின் வீரியம்

கரோனா நோய்த்தொற்றுக்குரிய அறிகுறிகளுக்கு ஏற்ப சித்த மருத்துவத்தில் எந்த மருந்துகளை பயன்படுத்துவது, அதன்மூலம் நோயாளிகளை குணப்படுத்துவது சாத்தியமா என்ற அடிப்படையில் எந்த உறுதியான முடிவுகளும் இல்லாத நிலையில், ஆங்கில மருந்துகளோடு சித்த மருந்துகளும் வழங்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

கரோனா
கரோனா

இது ஒருபுறமிருக்க வேலூரில் முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் அலையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து வேலூர் அரசு சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன் முதன்மை ஆராய்ச்சியாளராக இருந்து ஒரு குழுவுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

கரோனா முதல் அலையில் கிளினிக்கல் ட்ரையல் ரிஜிஸ்டரி ஆஃப் இந்தியாவின் (Clinical Trial Registry of India) அனுமதியுடன், வேலூர் தந்தை பெரியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று அறிகுறிகள் உடைய மற்றும் கரோனா அறிகுறியில்லாத 20 நோயாளிகள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நோயாளிகளின் ஒப்புதலோடு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், சித்த மருந்துகளின் செயல்திறன் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் பிரத்தியேகமாக சித்த மருத்துவ மருந்துகளை வைத்து மட்டும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை

என்னென்ன மருந்துகள்?

இந்த 20 பேரில் இருவர் ஐ.எல்.ஐ (ILI) எனப்படும் Influenza like illness உடையவர்களாக இருந்தனர். மீதம் இருந்தவர்கள் 18 பேர் லேசான அறிகுறிகள் உடையவர்கள் மற்றும் கரோனா அறிகுறிகளற்றவர்கள். இவர்களுக்கு ஏழு நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கபசுரக் குடிநீர், ஆடாதொடை மனப்பாகு, அமுக்கரா சூரணம் மாத்திரை, தாளிசாதி மாத்திரை, பிரம்மானந்த பைரவம் மாத்திரை ஆகிய ஐந்து மருந்துகள் ஆராய்ச்சியின்போது நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. ஏழாவது நாளில் கல்லீரல் மற்றும் சீறுநீரக பரிசோதனைகள் (Renal Function Test and Liver function test) ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

ஆர்.டி.பி.சி.ஆர், சி.டி ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் சிகிச்சை தொடங்குவதற்கு முன்னரும் பின்னரும் செய்யப்பட்டது. இதில் சித்த மருந்துகளால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

ஆய்வு முடிவு சமர்ப்பிப்பு

இந்த மருத்துவ ஆய்வினை ஒன்றிய, மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தாகத் தெரிவிக்கும் வேலூர் அரசு சித்த மருத்துவர் சோ. தில்லைவாணன், ஆயுர்வேத மருந்துகளுக்கான சர்வதேச ஆய்விதழின் (International Journal of Ayurvedic Medicine) மதிப்பாய்விலும் (Peer reviewed) இது குறித்து வெளியாகியிருப்பதாகக் கூறுகிறார்.

இது போன்ற வெளியீடுகளால் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட சித்த மருந்துகள், ஆதாரம் சார்ந்த மருத்துகளாக (Evidence based medicine) எடுத்துக்கொள்ளப்படும் என்கிறார் அவர்.

ஆய்வு
ஆய்வு

ஆய்வின் வெற்றி

லேசான, மிதமான மற்றும் கரோனா அறிகுறிகள் இல்லாத நோயாளிகளுக்கு இந்த மருந்தினைக் கொடுக்கலாம் என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் தீவிர நிலையை அடையாமல் நோயாளிகள் மீண்டுள்ளனர் என்பது ஆய்வின் உறுதியான கூடுதல் தகவல்.

ஆக்ஸிஜன் அளவு குறையாமலும், வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லாமலும் நோயாளிகள் குணமாகியுள்ளனர்.

பக்கவிளைவு ஏற்படுத்தாத சித்த மருத்துவம்

தொடர்ந்து பேசிய தில்லைவாணன், ’’இந்த ஆராய்ச்சி சர்வதேச மருத்துவ ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டு இருப்பதால் சித்த மருத்துவத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. சித்த மருந்துகளை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அரசாங்கம் செயல்திட்டம் கொண்டு வருவதற்கு இந்த ஆய்வு பயன்படும்” என்றார்.

சித்த மருத்துவர் சோ. தில்லைவாணன்
சித்த மருத்துவர் சோ. தில்லைவாணன்

பொதுமக்கள் பலரும் விரைந்து குணம் பெற பக்கவிளைவுகளுடன் கூடிய ஆங்கில மருத்துவத்தை நாடி வரும் சூழலில், சித்த மருத்துவ துறை சார்ந்த ஆராய்ச்சிகள் சர்வதேச ஆய்வு இதழ்களில் பிரசுரமாவது சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. அதே சமயம் மேற்குறிப்பிட்ட மருந்துகளை நன்கு பயிற்சி பெற்ற சித்த மருத்துவரின் வழிகாட்டுதலின்படி மட்டுமே எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து விரைந்து மீள உதவும் வேலூர் சிறப்பு சித்தா மையம்!

Last Updated : Aug 2, 2021, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.