ETV Bharat / city

கரோனாவிலிருந்து விரைந்து மீள உதவும் வேலூர் சிறப்பு சித்தா மையம்!

author img

By

Published : Jun 2, 2021, 8:21 PM IST

சிகிச்சையை பெற்றுக்கொண்டு நோயாளிகள் வெளியே செல்லும்போது முழுமையான சித்த மருத்துவ அறிவியலைப் பெற்று வெளியே செல்கின்றனர் என்பதுதான் வேலூர் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தின் சிறப்பு!

வேலூர், வேலூர் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம், vellore, vellore vit university, vellore vit university exclusive siddha covid centre, கரோனாவை துரத்தியடிக்கும் சித்த மருத்துவம், சித்த மருத்துவம்,  இயற்கை மருத்துவத்தில் கரோனாவை குணப்படுத்தலாம், இயற்கை மருத்துவத்தில் கரோனாவை குணப்படுத்தலாமா, ஏழு நாளில் கரோனாவை குணப்படுத்தும் சித்த மருத்துவம், siddha cures corona,  vellore siddha covid centre, siddha covid centre, சித்தா மருத்துவத்தில் கரோனா குணப்படுத்தம் மருந்துகள், முடக்கத்தான் கீரை சூப், தூதுவளை சூப், மூலிகை தேநீர், புதினா மல்லி சூப், ஆடாதோடை குடிநீர்
ஏழு நாளில் கரோனாவை துரத்தியடிக்கும் சித்த மருத்துவம்

வேலூர்: கரோனா நோய்த் தொற்று இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டபோதே சித்த மருத்துவத்தில் கரோனா தொற்றுக்கான சிறந்த மருந்தாக சித்த மருத்துவர்கள் கபசுரக் குடிநீரை பரிந்துரை செய்தனர்.

சித்த மருத்துவத்தின் தாக்குதல்

பின்னர், இதன் பயனை அறிந்துகொண்ட மத்திய ஆயுஷ் அமைச்சகம் (AYUSH MINISTRY) இந்தியா முழுவதும் உள்ள கரோனா நோயாளிகளுக்கு இந்த கபசுரக் குடிநீரை ஆங்கில மருந்துகளோடு சேர்த்து அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்தது.

இப்படியாக ஆங்கில மருத்துவத்தைத் தாண்டி தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் கரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் காலடி எடுத்து வைத்தது.

சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம்

இது ஒருபுறமிருக்க, வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் முதல் அலையிலேயே நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் முழுமையாக சிகிச்சை அளிக்க வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. அந்த மையத்தில் கரோனா சிகிச்சையும் சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது உருவெடுத்துள்ள இரண்டாவது அலையிலும் அதேபோன்ற ஒரு சிறப்பு மையத்தை வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இணங்க, மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் அறிவுரையின்படி வேலூர் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தினை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர்.

தேவை அதிகம்

ஏறத்தாழ, 200 படுக்கை வசதிகளைக் கொண்டு இங்கு முழுவதும் பிரத்யேகமாக சித்த மருத்துவத்தைக் கொண்டே சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள், அவர்களது கரோனா பரிசோதனை முடிவைக் காண்பித்து இங்கு தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஏழு நாளில் கரோனாவை துரத்தியடிக்கும் சித்த மருத்துவம்

"கரோனா தொற்றின் முதல் அலையில் சித்த மருத்துவத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்து 700 பேருக்கும் மேற்பட்டோர் சித்த மருத்துவ சிகிச்சைப் பெற்று பலன் பெற்றதையும் ஒட்டி, கரோனா இரண்டாவது அலையிலும் சித்த மருத்துவத்திற்கான தேவையானது அதிகமாக இருப்பதை அறிந்து இந்த பிரத்யேக சித்த மருத்துவ சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தை அமைத்துள்ளோம்" என்கிறார் விஐடி சித்த மருத்துவ சிறப்பு கரோனா சிகிச்சை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தில்லைவாணன்.

தொடர்ந்து இங்கு அளிக்கப்படும் மருத்துவ முறை குறித்தும், உணவு உள்ளிட்டவை குறித்தும் நம்மிடயே அவர் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவ முறை

"மனதளவில் நோயாளிகள் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக மருத்துவம் சார்ந்த அறிவையும், பொது அறிவையும் பெற நூலகம் ஒன்றை இங்கு அமைத்துள்ளோம். இது மட்டுமின்றி தினமும் காலையில் யோகாசன பயிற்சி அளிக்கப்படுகிறது. திருமூலரின் மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்வதனால் நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

கூடுதலாக, இவை ஆக்ஸிஜன் அளவை இயற்கையான முறையில் உயர வழிவகை செய்கிறது. சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள நொச்சி இலை, மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு நீராவி பிடித்தல் முறையையும் இங்கு பயன்படுத்துகிறோம். இதனால், நோயாளிகளுக்கு மேல் சுவாசப் பாதையில் உள்ள நோய் அறிகுறிகள் நீங்கி எளிதாக சுவாசிக்க இயலும். மேலும் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் ஆகியவையும் நீங்கும்.

அறிவியல் அனுபவம்

இந்த சிகிச்சை மையத்தில் முதல் அலையின்போது ஆய்வு ரீதியாக பயன்படுத்தப்பட்ட மருத்துகளோடு மட்டுமல்லாமல், இரண்டாவது அலையில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப பிரத்யேகமான மருத்துவ முறையையும் பயன்படுத்தி வருகிறோம்.

இதன் ஒரு பகுதியாக நோயாளிகளுக்கு இரவில் ஆடாதொடை குடிநீர் அளிக்கப்படுகிறது. இவை இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றில் இருந்து காக்கிறது. இரத்தம் உறைதல், மூச்சுத்திணறல் ஆகியற்றை தடுப்பதற்காக கிராம்பு கசாயமும் அளித்து வருகிறோம்.

இந்த சிகிச்சையை பெற்றுக்கொண்டு நோயாளிகள் வெளியே செல்லும்போது முழுமையான சித்த மருத்துவ அறிவியலைப் பெற்று வெளியே செல்கின்றனர் என்பது இந்த சிகிச்சை மையத்தின் சிறப்பு என்றே கூறலாம்.

உணவு முறை

இந்த மையத்தில் சித்த மருந்துகள் மட்டுமல்லாமல் அதோடு சேர்ந்து சித்த மருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சிறந்த உணவையும் வழங்கி வருகிறோம். இங்கு சிகிச்சைப் பெறும் அனைவருக்கும் தினசரி காலையில் மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான் கீரை சூப், தூதுவளை சூப், மூலிகை தேநீர், புதினா மல்லி சூப் போன்றவற்றை தயார் செய்து கொடுத்து வருகிறோம்.

மருந்துகளோடு சேர்த்து இந்த இயற்கையான உணவு முறையையும் நோயாளிகள் கடைபிடிக்கும்போது நோயிலிருந்து வெகுவிரைவில் மீண்டெழுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

தொடர்ந்து பேசிய அவர், ”அறுபது வயதிற்குள் இருக்கக்கூடிய நோயாளிகள், வேறு இணை நோய்கள் இருந்தவர்களாக இருந்தாலும் சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலமாக அவர்கள் நோயில் இருத்து வெகு விரைவில் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பது தான் எங்களுடைய உண்மையான செய்தியாக உள்ளது.

இங்கு தங்கி சிகிச்சைப் பெறுபவர்கள் அனைவருமே ஏழு நாள்களில் வெகு விரைவாக மீள முடியும் என்பது எங்களுடைய நம்பிக்கை” எனத் தெரிவித்தார்.

சித்த மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு ஏற்றவாறே இந்த சிறப்பு சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்திற்கான வரவேற்பும் குறையவில்லை. பலரும் கரோனா நோய்கு சிகிச்சை பெற இயற்கையான முறையில் பக்கவிளைவுகளற்ற சித்த மருத்துவத்தை நாடி வந்த வண்ணம் தான் உள்ளனர்.

இதையும் படிங்க: விலையேற்றம் விழலுக்கு இறைத்த நீர் - உப்பு விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.