வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் செயல்படும் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு மையத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
இதில், வேலூர், காட்பாடி, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1912, 1800 4258 912 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.சி வீரமணி புகார் மையத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சர் வெளிநாடு சென்றாலும் அரசு நிர்வாகம் தொடர்ந்து எப்போதும் போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்றார். அவரது வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்வது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பதில் அளித்துவிட்டார் என்றும் கூறினார்.
ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது பற்றி முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.