ETV Bharat / state

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது எப்படி? - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிறப்பு முகாம்.. பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 6:48 PM IST

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டிற்கான நீரிழிவு முகாம் மருத்துவமனை வளாகத்தில் இன்று(நவ.28) நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு எளிதில் புரியும்படி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இலவச நீரிழிவு மருத்துவ முகாம்

வேலூர்: நீரிழிவு நோயாளிகளிக்கான சிறப்பு முகாம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான சிறப்பு முகாம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இன்று(நவ.28) நடைபெற்றது. இந்த முகாமை சிஎம்சி மருத்துவர் நீரிழிவு நிபுணர் டாக்டர் துவக்கி வைத்தார். இதனையடுத்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை குறித்து பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நோயாளிகளின் பரிசோதனை தொடர்பான கண்காட்சியும் நடத்தப்பட்டது.

இந்த முகாம் 18பகுதிகளாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்றன. குறிப்பாக, நீரிழிவு நோய் ஏற்பட்டால் எவ்வாறு அதை அதிகரிக்காமல் பாதுகாத்து தேவையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், நீரிழிவு ஆரம்ப நிலையில் உள்ள போது எடுத்துகொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள், இவை அனைத்தையும் கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில், குறைந்தபட்சம் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வரக்கூடிய அபாயம் மற்றும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது போன்ற வழிமுறைகள் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி பொம்மாலாட்ட நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி நிகழ்ச்சியில் நீரிழிவு நோயின் அபாயத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் முன்வைக்கப்பட்டன. அவை, "வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளில் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் நீரிழிவு குறையும். சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும். பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு நீரிழிவு நோய் வரும்.

மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம். அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும் எல்லா பொருள்களும் நீரிழிவுயை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

உணவு பழக்கவழக்கம் என்று வரும்போது, மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி, 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும். தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட், பாதாம்பருப்பு, நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்களை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம் கடைப்பிடித்தால் நீரிழிவு நோயின் அபாயத்தை தவிர்க்க வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது மிக முக்கியம்" போன்ற பல்வேறு வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.

இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று நீரிழிவு தொடர்பான சந்தேகங்களையும், கேள்விகளையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து இன்று(நவ.28) மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சுவற்றில் நீரிழிவு நோய் பற்றியப் பட விளக்கங்கள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள், இந்த முகாம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் தலையிட மறுப்பு - நிர்வாக ரீதியாக அணுக உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.