ETV Bharat / state

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு: 15 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக்கும்; சிறந்த காளைக்கு வீட்டுமனை பரிசாக வழங்கல்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 10:24 PM IST

trichy-suriyur-jallikattu-completion
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு: 15 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக்-கும் சிறந்த காளைக்கு வீட்டுமனையும் பரிசாக வழங்கப்பட்டது..

Trichy Suriyur Jallikattu: திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்‌ போக்குவரத்து ஆர்.ஐ மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட சுமார் 72 பேர் காயம் அடைந்ததில் 13 பேர் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டு தோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியைத் திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் பார்த்திபன் காலை 7.30 மணிக்குத் தொடங்கி வைத்தார். ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் மாடு முதலில் அவிழ்த்து விடப்பட்டது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்கக் காசு, வெள்ளிக் காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கிய நாமக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்ற வீரருக்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி அறிவழகன் பைக்கை பரிசாக வழங்கினார்.

அதே போல் சிறந்த காளையாக இலந்தப்பட்டியை சேர்ந்த தமிழ் என்பவரின் மாட்டிற்கு வீட்டுமனை முதல் பரிசாகவும், இரண்டாவது சிறந்த காளையாக செங்குறிச்சியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மாட்டிற்குத் தங்க மோதிரமும், மூன்றாவது சிறந்த காளையாக நரியப்பட்டி சேர்ந்த தனபால் என்பவரது மாட்டிற்கு 10 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 358 மாடுபிடி வீரர்கள் 7 சுற்றுகளாகக் கலந்து கொண்டனர். இதில், 658 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டது.

இந்த போட்டிக்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், துவாக்குடி போக்குவரத்து ஆர்.ஐ ரத்தினம், மாடுபிடி வீரர்கள் 18 பேர், மாட்டின் உரிமையாளர் 32 பேர், பார்வையாளர்கள் 20 பேர் என 72 பேர் காயமடைந்தனர். இதில் 13 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கீதா (வயது 46) என்ற தலைமைக் காவலர் நெஞ்சுவலி காரணமாகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி எஸ்.பி.வருண் குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

முன்னதாக கால்நடை இணை இயக்குநர் மும்மூர்த்தி தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்குப் போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்குக் கலந்து கொள்வதற்கு உரியத் தகுதி உள்ளதா என்பதை மருத்துவ ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதில் 3 மாடுகள் தகுதி நீக்கம் செய்தனர்.

அதேபோல், திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதைப் பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதைப் பரிசோதனை செய்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலிகள் அனைத்தும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 3வது முறையாக கார் வென்ற மாடுபிடி வீரர் பிரபாகரன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.