ETV Bharat / state

மன அழுத்ததை குறைக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி - திருச்சி காவல் ஆணையர் சத்யபிரியா

author img

By

Published : Jul 13, 2023, 2:15 PM IST

Etv Bharat
Etv Bharat

காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருச்சி காவல் துறை ஆணையர் சத்யபிரியா கூறி உள்ளார்.

மன அழுத்ததை குறைக்க காவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்படும்

திருச்சி: திருச்சி மாநகர் கே.கே.நகர் பகுதியில் உள்ள ஆயுதப் படை காவலர் திருமண மண்டபத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் முதல் முறையாக நடமாடும் முழு உடல் பரிசோதனை கூட வாகனத்தை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்ய பிரியா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. மேலும், 24 மணி நேரம் அயராத தங்கள் நலம் கருதாமல் உழைக்கும் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்ப நலனை கருத்தில் கொண்டு, இந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (ஜூலை 13) முதல் வருகிற 18ஆம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, இந்த பரிசோதனை முகாமில் டிஜிட்டல் எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, ஈசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மதுரை மண்டல தலைமைச் செயல் அதிகாரி நீலக்கண்ணன், மருத்துவர் சிவம், மார்க்கெட்டிங் மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரோபோடிக் பயிற்சி வகுப்பு!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருச்சி காவல் துறை ஆணையர் சத்யபிரியா, “திருச்சி மாநகர் முழுவதும் 28 வகையான உடல் பரிசோதனை செய்யக் கூடிய நடமாடும் வாகனத்தை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இது காவலர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மன உளைச்சலை குறைப்பதற்காக வாரம் ஒரு முறை யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், முதலில் அவர்கள் உடல் நலம் முக்கியம். ஆகையால், முதல் கட்டமாக இலவச மருத்துவ பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்துள்ளோம்.

காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது. காவலருக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என வரும் தகவல் தவறு” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆளுநரும் முதலமைச்சரும் மோதிக்கொள்வது தமிழ்நாட்டிற்கு பலவீனம்' - அன்புமணி ராமதாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.