ETV Bharat / state

Test Purchase: வணிகர்களை வதைக்கும் திட்டத்தை ரத்து செய்க - தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு

author img

By

Published : Jan 11, 2023, 7:51 PM IST

தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு
தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள டெஸ்ட் பர்சேஸ் முறையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சி வெல்லமண்டி சாலையில் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடைபெற்றது.

வணிகர்களை வதைக்கும் திட்டத்தை ரத்து செய்க - தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு

திருச்சி: சில்லறை வணிகர்கள், தங்களுக்குத் தேவையான பொருட்களை மொத்த வியாபாரிகளிடம் வாங்கும்போது பொருட்களுக்கு உண்டான சரக்கு சேவை வரியை நேரடியாக செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சில்லறை வணிகர்கள் கடைகளுக்கு செல்லும் வணிக வரித்துறை அதிகாரிகள், டெஸ்ட் பர்சேஸ் எனக் கூறி பொருட்கள் வாங்கி, அதற்கு உரிய ரசீது தரவில்லை என அபராதம் வசூலிப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக வரித்துறையின் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி வெல்லமண்டி பழைய மருத்துவமனை சாலைப் பகுதியில் திரண்ட தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெஸ்ட் பர்சேஸ் முறையை ரத்து செய்யக்கோரிய, வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து வணிக நிறுவனங்கள் மட்டும் கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் முறையை ரத்து செய்யக் கோரிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை ஒட்டினர்.

டெஸ்ட் பர்சேஸ் ரத்து குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்டத் தலைவர் ஸ்ரீதர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக, தமிழக வணிக வரித்துறை அதிகாரிகள் டெஸ்ட் பர்சேஸ் என்ற பெயரில் சில்லறை வணிக வியாபாரிகளின் கடைகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்கிவிட்டு, அதற்கு வரி செலுத்தாமல் விற்பனை செய்வதாகக் கூறி, பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர்.

சில்லறை வணிகர்கள் ஏற்கனவே வரி செலுத்தப்பட்ட பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வரும் நிலையில், வரி செலுத்தவில்லை எனக் கூறி அபராதம் விதிப்பது வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் செயலாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, முதற்கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் அந்தந்த மாவட்ட வணிகவரி உயர் அதிகாரிகளிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திரளாக சென்று கோரிக்கை மனு அளித்து வருகிறோம்.

அதேபோல் மண்டல, மாநில அளவிலான வணிக வரித்துறை அதிகாரிகளிடம் நேரடியாக சென்று டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. எனினும் டெஸ்ட் பர்சேஸ் நடைமுறை தற்போது வரை தொடர்வதால் வேறு வழியின்றி கடைகள் முன் ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க: "குற்றச்சாட்டை கூறிவிட்டு ஏன் ஓடி ஒளிந்துவிட்டீர்கள்?" - சட்டப்பேரவையில் ஈபிஎஸ் Vs ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.