ETV Bharat / state

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவதே காவிரியில் தண்ணீர் பெற ஒரே வழி... அன்புமணி ராமதாஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 10:31 PM IST

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அன்புமணி ராமதாஸ் பேட்டி

Cauvery Issue: மத்திய அமைச்சரை சந்திப்பதிலும் நம்பிக்கை இல்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவதே காவிரியில் தண்ணீர் பெற ஒரே வழி

சென்னை: மேகதாது அணை கட்டுவதற்கு முன்பே கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறார்கள். அணையை கட்டிவிட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வர போவதில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்; "டெல்லியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். அதன்பின், காவேரியிலிருந்து தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை வலியுறுத்த உள்ளோம்.

தமிழகத்திற்கு கடந்த 10ஆம் தேதி வரை 60 டி.எம்.சி நீரை காவேரி ஒப்பந்தப்படி கர்நாடகா தந்து இருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா 6 டி.எம்.சி. தண்ணீரை தான் தந்ததுள்ளது. கர்நாடகா காவேரி படுகையில் உள்ள பெரிய அணைகளில் கிட்டத்தட்ட 64 டி.எம்.சி. நீர் இருக்கிறது. ஆனால் மேட்டூரில் 15 டி.எம்.சி. நீர் தான் உள்ளன. சுமார் 5 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து உள்ளனர்.

இதில், 3 லட்சம் ஏக்கர் அறுவடை செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் கருகி கொண்டு இருக்கிறது. ஒரு வாரத்தில் தண்ணீர் விடவில்லை என்றால் 2 லட்சம் ஏக்கர் நாசமாகி விடும். உணவு பஞ்சம் ஏற்படும். கர்நாடக அரசு பொய் சொல்லி கொண்டு இருக்கிறது. உச்சநீதிமன்றம், காவேரி நடுவர் மன்றம், காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி ஒழுங்கு முறை குழு, ஒப்பந்தம் ஆகியவற்றை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்; "கர்நாடக தனி நாடு போல் செயல்படுகிறது. இந்தியாவில் இருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. கர்நாடக - தமிழ்நாடு நல்ல உறவு இருக்க வேண்டும். இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறபோகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் காவேரியை நம்பி உள்ளன. குடிநீர், வாழ்வாதாரம், விவசாயம் உள்பட அனைத்துக்கும். சென்னையில் வாழும் 1 கோடி மக்களும் காவேரியை நம்பி உள்ளனர்.

காவேரியில் இருந்து தண்ணீர் தர மாட்டோம் என்பது வீம்பு. அரசியல் காரணங்களுக்காக செய்கின்றனர். இன்னும் நாடாளுமன்ற தேர்தல் 5 அல்லது 6 மாதங்களில் வர உள்ளதால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கொண்டு இருக்கிறார்கள். மேகதாது அணை கட்டுவதற்கு முன்பே கர்நாடகா தண்ணீர் தர மறுக்கிறார்கள். அணையை கட்டிவிட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வர போவதில்லை.

இதை எல்லாம் மத்திய அமைச்சரிடம் விளக்கி கர்நாடக அரசை தண்ணீர் தர வலியுறுத்த சொல்ல உள்ளோம். கர்நாடக அரசை வலியுறுத்தினாலும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் போய் பார்ப்பது நமது கடமை. இதற்கு ஒரே வழி உச்சநீதிமன்றம் தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கை விரைவாக விசாரிக்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.