ETV Bharat / state

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா...திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 7:45 AM IST

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா

Karthigai Deepam 2023: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் விழா

திருச்சி: தமிழர்களின் தொன்மையான திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீப விழாவில், இறைவனை ஒளி வடிவில் வழிபடுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை திருவிழாவானது திருக்கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானது. இங்கு உள்ள கடவுளை பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது‌. இந்தக் கோயிலுக்கு உள்ளுர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை எனும் பெருந்தீப விழா நேற்று இரவு 8.30 மணிக்கு‌ வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை ஒட்டி, நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்தன மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு திருமஞ்சனம் கண்டருளி மாலை மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பின்னர், மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு 2ஆம் புறப்பாடாக கதிர் அலங்காரம் எனப்படும் மூலிகைகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, கருடாழ்வார் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கிருந்து தீபமானது கொண்டு செல்லப்பட்டு, பின்னர் 20 அடி உயரத்தில் பனை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையை வலம் வந்து கார்த்திகை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இந்த விழாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில், திருச்சியில் உள்ள அனைத்து கோயில்களிலும் பனை ஓலையைக் கொண்டு பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் சொக்கப்பனை கொளுத்தும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பின்னர், நம்பெருமாள் திருவந்திகாப்பு செய்யப்பட்டு, இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் இரண்டாம் நாள் தீபம்: ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.