ETV Bharat / state

திருச்சி குழந்தைக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் பின்னணி - குழந்தைக் கடத்தலில் பெரிய நெட்வொர்க்?

author img

By

Published : Jan 10, 2023, 4:45 PM IST

Updated : Jan 10, 2023, 8:01 PM IST

Etv Bharat
Etv Bharat

குழந்தைக் கடத்தல் வழக்கில் ஏற்கனவே குழந்தையின் தாயாரை திருச்சி போலீசார் கைது செய்தநிலையில், இது தொடர்பாக, வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தலில் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருச்சி குழந்தைக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் பின்னணி - குழந்தைக் கடத்தலில் பெரிய நெட்வொர்க்?

திருச்சி: லால்குடி, அரியூர் பகுதியைச் சேர்ந்த பிரபு-மெர்சி தம்தியினர், வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வந்தனர். பின், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், பிரபுவின் அலுவகலத்திற்கு அவரை ஒரு வழக்கு தொடர்பாக, திருவெறும்பூரைச் சேர்ந்த சண்முகவள்ளி என்பவர் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். தொடர்ந்து, அவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவினால் இருவரும் சில காலமாக ஒன்றாக வசிப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, லால்குடி அடுத்த அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜானகி(32) என்ற பெண் பிரபுவின் அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் பல ஆண்களுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவர் தான் கர்ப்பம் தரித்துள்ளதாகவும், 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், என்ன செய்வது? எனத் தெரியவில்லை எனவும் கடந்த ஜூலை மாதத்தில் வழக்கறிஞர் பிரபுவிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்ட பிரபுவும், ஜானகியிடம் 'குழந்தைப் பிறக்கட்டும் பார்த்துக் கொள்வோம்' என்று கூறியுள்ளார். இதனிடையே, ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்தால் ரூ.3.5 லட்சம், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.5 லட்சம் என குழந்தை பிறப்பதற்கு முன்னாகவே சட்டவிரோதமாக குழந்தையை விற்பதற்கு ஜானகிக்கு தெரியாமல் திட்டம் தீட்டியுள்ளனர்.

தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஜானகி, பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் கணவர் யார்? எனத் தெரிவிக்காததால் அப்பெண்ணை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, மருத்துவர்கள் 'உன் கணவர் எங்கே?' எனக் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளிக்காத நிலையில், மருத்துவமனை தரப்பில் சைல்டு லைன் எண்ணுக்கு தொடர்புகொண்டு, ஜானகிக்கு இவ்வாறு நடந்தவைக் குறித்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாகத்தின் இச்செயலைக் கண்ட வழக்கறிஞர் பிரபு - சண்முகவள்ளி தம்பதியினர், ஜானகி மற்றும் அவரது குழந்தையை தூக்கிக்கொண்டு தலைமறைவாகினர்.

பிறந்து 10 நாட்களே ஆன, பச்சிளம் பெண் குழந்தையை அதன் தாயார் ஜானகி, வழக்கறிஞர் பிரபு-சண்முகவள்ளி ஆகியோருடன் இணைந்து நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலம் அருகில் கடந்த 23ஆம் தேதி சென்று விற்பதற்காக காரில் சென்றுள்ளனர். உடன் தாயார் ஜானகியும் இருந்துள்ளார். அங்கு இருந்த சிலரிடம் பச்சிளம் குழந்தையை இரக்கமில்லாமல், ரூ.1 லட்சத்திற்கு விற்றுவிட்டு ஜானகிக்கு ரூ.80 ஆயிரமும், வழக்கறிஞருக்கு ரூ.20 ஆயிரமும் என பிரித்துக்கொண்டனர்.

இதற்கிடையே குழந்தையை பல லட்சங்களுக்கு விற்பனை செய்ததாக தெரிந்துகொண்ட குழந்தையின் தாயார் ஜானகி, தனது குழந்தையை கடத்திவிட்டதாக லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த அக்டோபர் மாதம் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தன் குழந்தையைக் காணவில்லை எனவும், இதற்கு காரணம் வழக்கறிஞர் பிரபு-சண்முகவள்ளி தம்பதியினர் தான் எனவும் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவர், 'என் குழந்தையை கண்டுபிடிக்காமல் போலீசார் உள்ளதாகவும், இதற்கு காரணமான பிரபு-சண்முகவள்ளி ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்துள்ளார்.

இதன் பின், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தகவல் தெரிவிக்கப்பட்டு முழு விசாரணைக்காக, 3 ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீசாரை கொண்ட தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த 4ஆம் தேதி ஜானகி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், பிரபு மற்றும் சண்முகவள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும்; குழந்தை தன்னிடம் தான் உள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட நீதிபதி, ஜானகியின் பதில் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், ஜானகியிடம் 'குழந்தையைக் காட்டுங்கள்' என்று கூறியுள்ளனர். ஆனால், ஜானகி குழந்தையை காட்டாததால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, 'ஜானகி மீது உரிய விசாரணை நடத்தி குழந்தையைக் கண்டுபிடியுங்கள்' என திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, ஜானகி மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, கடந்த ஜனவரி 7 ஆம் தேதி திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பாக, வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் இன்று (ஜன.10) கைது செய்தனர். மேலும், இதுகுறித்து சுய உதவி குழுவைச் சேர்ந்த கவிதா என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று கைகள் மாறி, குழந்தையை தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குழந்தையை கடத்தி விற்பனை செய்த கும்பலுடன் சேர்ந்து, இதுவரை எத்தனை குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்? ஜானகிக்குப் பிறந்த குழந்தையை விற்பனை செய்தார்களா? (அ) நரபலி கொடுத்தார்களா? என்பது குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

செல்ஃபோன் டவரை வைத்து தனிப்படை போலீசார் பார்த்ததில் சென்னை, நாமக்கல், திருச்சி எனப் பல்வேறு மாவட்டங்களில் அவற்றின் சிக்னல் காட்டுவதால் தமிழ்நாட்டில் குழந்தைகளை கடத்தும் பெரிய நெட்வொர்க் கும்பல் இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து குழந்தையை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சி குழந்தை கடத்தல் வழக்கு; தாய் கைது! நரபலியா என தீவிர விசாரணை

Last Updated :Jan 10, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.