ETV Bharat / state

திருச்சி சமயபுரம் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!

author img

By

Published : Apr 26, 2023, 5:55 PM IST

Updated : Apr 26, 2023, 6:47 PM IST

திருச்சி சமயபுரம் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மொட்டையடிக்க வரும் பக்தர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி சமயபுரம் கோயிலில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல் செய்ததாகப் பக்தர்கள் புகார் எழுப்பிய நிலையில், 7 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 150-க்கும் மேற்பட்ட மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

அம்மன் கோயில்களில் புகழ்பெற்றதும், முதன்மையானதுமான அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். தமிழகம் முழுவதும் இருந்து வருகை புரிந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதலின் படி, அங்கு மொட்டை அடித்து வருகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், திருக்கோயில்களில் முடிக் காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மொட்டை போடுவதற்கு பக்தர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தி இருந்தனர்.

இதனிடையே, முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டாயம் கட்டணம் வசூலித்துக்கொண்டு தான் மொட்டை அடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி, அதிக கட்டணம் வசூலித்த 7 பேரை தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதனைக் கண்டித்து, மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்திற்கு முன்பு அமர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி, மொட்டை அடிப்பதற்கு கட்டாயமாக பணம் வாங்கக்கூடாது எனக் கூறி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிலையில், மொட்டையடிக்க வரும் பக்தர்களிடம் பணம் வாங்குவதாக கூறுவது முற்றிலும் பொய் எனவும்; மாறாக பக்தர்கள் தாங்களாக அன்பளிப்பாக தரும் பணத்தையே பெற்று வரும் நிலையில், மொட்டைக்கு கட்டாய கட்டணம் வசூலிப்பதாக கூறுவது பொய்க் குற்றசாட்டாகும் என்றனர். மேலும், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் ஆணையின்படி, திருக்கோயிலில் மொட்டைக்குப் பணம் வாங்காமல் இருக்க வேண்டும்; மாறாக, எந்த வழியிலும் பணம் வாங்கக் கூடாது; இதனை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில், இவ்வாறு மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: Adi Shankaracharya Jayanti: காஞ்சியில் ஆதிசங்கரர் தங்கத்தேரில் திருவுலா!

Last Updated : Apr 26, 2023, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.