ETV Bharat / state

மகனாக தாய்க்கு இறுதிகாலத்தில் கடமை செய்ய ஆசைப்படுகிறேன் - சாந்தன் இலங்கை அதிபருக்கு கடிதம்

author img

By

Published : Jul 11, 2023, 5:06 PM IST

sandhan has written a letter
சாந்தன் அதிபருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், ''ஒரு மகனாக தாய்க்கு இறுதி காலத்தில் கடமை செய்ய ஆசைப்படுகிறேன்'' என இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருச்சி: 'ஒரு மகனாக என் தாய்க்கு இறுதி காலத்தில் கடமை செய்ய ஆசைப்படுகிறேன்' என திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன் இலங்கை அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சுதந்திர ராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் ஃபயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ''இலங்கை குடிமகனான நான் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன்.

தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக, எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்'' என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ''தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. எனவே, தயவு செய்து எனது சிரமத்தைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும்'' என அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார், சாந்தன் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.