ETV Bharat / state

'கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்னையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' - கம்யூனிஸ்ட் கட்சி

author img

By

Published : Jul 17, 2023, 10:28 PM IST

40 வருடங்களுக்கும் மேலாக சரியான தார் சாலை வசதி அமைத்து தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘கூட்டணியில் இருப்பதால் பொதுமக்கள் பிரச்சனையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ - கம்யூனிஸ்ட் கட்சி
‘கூட்டணியில் இருப்பதால் பொதுமக்கள் பிரச்சனையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ - கம்யூனிஸ்ட் கட்சி

'கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்னையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்' - கம்யூனிஸ்ட் கட்சி

திருச்சி: மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்டது, காந்திநகர் கிழக்கு பகுதி. இந்த பகுதியானது வார்டு 19 மற்றும் 20க்கு உட்பட்டது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான சாலை வசதி இல்லை. தார் சலை அமைத்து தரக்கோரி பல வருடங்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மாறிய நிலையிலும் அவர்களின் சாலை வசதி கோரிக்கையில் மட்டும் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்பகுதி பொதுமக்களோடு இணைந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. மேலும் அந்தப் போராட்டங்களின் மூலம் அரசிடம் சாலை வசதி கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அந்த கோரிக்கையை கடந்த அதிமுக அரசும் இப்போது உள்ள திமுக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகம் தொழில் மற்றும் குடிநீர் வரி வசூலித்து வரும் நிலையில் நகராட்சியில் மண் சாலைகள் இருக்கக் கூடாது என்ற விதிமுறையைப் பின்பற்ற மறுத்து வருகிறது.

மேலும் அந்த சாலை அமைக்கப்பட உள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என வக்பு வாரியம் வழக்கு தொடுத்துள்ளது. இதன் காரணமாக நகராட்சி சார்பில் சாலை அமைப்பதில் சிரமம் உள்ளதாகக் கூறி சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைத்துள்ளது.

இதையும் படிங்க: "எங்க வேலை ரொம்ப ஈஸி" - பொன்முடி வீட்டில் ED ரெய்டு குறித்த முதல்வர் கூலாக பேட்டி!

இதனால் கொந்தளித்த அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி குறித்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு வந்த வருவாய்த் துறையினர் இன்னும் பத்து நாட்களுக்குள் சுமூக பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வருவாய்த்துறையின் பதிலை ஒரு மனதாக ஏற்று ஆர்ப்பாட்டத்தை விரைந்து முடித்து கலைந்து சென்றனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ''காந்தி நகர் கிழக்கு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களிடம் நகராட்சி நிர்வாகம் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகளை வசூலித்து வருகிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு தார் சாலை வசதியை ஏற்படுத்தித் தராமல் பொதுமக்களை வஞ்சித்து வருவது ஏன்? அந்தப் பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அந்த வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர், நகராட்சி பெருந்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என யாருக்கும் இதில் அக்கறை இல்லாதது ஏன்?. கூட்டணியில் இருப்பதால் பொதுமக்கள் பிரச்னையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்'' என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், ''தார் சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப் போகும் அப்பகுதி பொதுமக்களோடு இணைந்து போராட்டத்தை வலுப்படுத்துவோம்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Vellore: திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ந்து போன கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.