ETV Bharat / state

திருச்சி காங்கிரஸில் சலசலப்பு.. எம்பி திருநாவுக்கரசருக்கு எதிராக போர்க்கொடி.. நடப்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2024, 2:06 PM IST

Congress
காங்கிரஸ்

Congress: திருச்சி காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி பறிக்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பதவி பறிப்பு

திருச்சி: திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 17 கோட்டங்களுக்கு, கடந்த 12ஆம் தேதி புதிய தலைவர்கள் நியமித்துள்ளதாக மாவட்டத் தலைவர் ரெக்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரை படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலின்படியும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என இடம் பெற்றிருந்தது.

அதன்படி ஸ்ரீரங்கம் 1, 2, 3, 4 வார்டுகளுக்கு ஜெ.ஜெயம் கோபியும், திருவானைக்காவல் 5, 6, 7 வார்டுகளுக்கு ஆர்.தர்மேஷ் அகிலும், மலைக்கோட்டை 12, 13, 14, 15 வார்டுகளுக்கு ஜே.வெங்கடேஷ் காந்தியும், மார்க்கெட் 19, 20, 21 வார்டுகளுக்கு எஸ்.சம்சுதீனும், தாராநல்லூர் 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு ஆர்.ஜி.முரளியும், வரகனேரி 30, 31, 32 வார்டுகளுக்கு இஸ்மாயிலும், பாலக்கரை 33, 34, 49, 50 வார்டுகளுக்கு ஜே.ஜே.வின்சென்ட்,

மேலும், சுப்பிரமணியபுரம் 46, 47, 59, 61 ஆகிய வார்டுகளுக்கு எஸ்.எஸ்.எட்வின்ராஜூம், ஏர்போர்ட் 60, 63, 64, 65 ஆகிய வார்டுகளுக்கு கே.கனகராஜூம், அரியமங்கலம் 35, 36, 37, 38 ஆகிய வார்டுகளுக்கு டி.அழகரும், காட்டூர் 39, 40, 41, 42, 43 ஆகிய வார்டுகளுக்கு ஏ.ராஜா டேனியல் ராயும், பொன்மலை 44, 45, 48 ஆகிய வார்டுகளுக்கு ஜி.பாலச்சுந்தரும்,

உறையூர் 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளுக்கு கே.பாக்கியராஜூம், புத்தூர் 24, 25, 26 ஆகிய வார்டுகளுக்கு பி.மலர் வெங்கடேசும், தில்லை நகர் 22, 23, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு ஆர்.கிருஷ்ணாவும், ஜங்சன் 29, 51, 52, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு வி.பிரியங்கா பட்டேலும், பஞ்சப்பூர் 55, 56, 57, 58, 62 ஆகிய வார்டுகளுக்கு எ.மணிவேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ள அனைவரும் எம்.பி திருநாவுக்கரசரின் பரிந்துரை என கூறப்படுகிறது. முன்னதாக இந்த அறிவிப்பில் நீண்ட நெடிய காங்கிரஸ் தொண்டர்களாக அறியப்படும் ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவரான சிவாஜி சண்முகம், பாலக்கரை கோட்டத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான இனிகோ ஜெரால்டு, மலைக்கோட்டை கோட்டத் தலைவரான ஏ.ரவி நாடார், உறையூர் கோட்டத் தலைவரான பிரேம், பொன்மலை கோட்டத் தலைவரான செல்வகுமார் ஆகிய 5 கோட்டத் தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்ப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை திருச்சி அருணாச்சலம் மன்றத்தில், நீக்கப்பட்ட ஐந்து கோட்டத் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அதனைத் தொடர்ந்து, எம்.பி திருநாவுக்கரசர் மற்றும் மாவட்டத் தலைவர் ரெக்ஸூக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி சிவாஜி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த அறிவிப்பு என்பது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் எடுத்த தன்னிச்சையான முடிவு. எங்களை இந்த அறிவிப்பு கட்டுப்படுத்தாது. காங்கிரஸ் பேரியக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் நியமிக்கப்பட்ட கோட்டத் தலைவர்கள் அல்ல. காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்.

நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருட காலம்தான் ஆகிறது. எங்களது பதவி காலம் என்பது மூன்று வருடம். இன்னும் இரண்டு வருட காலம் பதவி இருக்கிறது. எனவே நிலைமை இப்படி இருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளான எங்களை, மாவட்டத் தலைவர் ரெக்ஸ் எப்படி மாற்ற முடியும்? இது அவரது தன்னிச்சையான முடிவு.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும், ராகுல் காந்திக்கும், மாநிலத் தலைவருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். எம்.பி திருநாவுக்கரசரின் கைக்கூலியான ரெக்ஸின் இந்த அறிவிப்பை ஏற்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாரத் ஜோடோ நியாய யாத்திரா : ராகுல் காந்தி எங்கெல்லாம் எவ்வளவு நாட்கள் பயணம்? முழு தகவல் இங்கே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.