கிடப்பில் போடப்பட்ட தூர்வாரும் பணி - கோயில் பாதையில் தேங்கிய மழைநீர்

author img

By

Published : May 5, 2022, 9:44 AM IST

Updated : May 5, 2022, 5:15 PM IST

மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார்

திருச்சி திருவானைக்கோயில் தூம்புகளைத் தூர்வாருவதாகக் கூறி பாதியிலேயே பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டதால் சாதாரண மழைக்கே கோயில் செல்லும் பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி: திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோயில் நகரமாகும். இதனைத் திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதைப் பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. இது, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60-ஆவது சிவத்தலமாகும்.

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

கோயில் பாதையில் தேங்கிய மழைநீர்

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.

சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளை கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுத்ததாகத் தல வரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலைத் திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள், ஆனால் இன்றோ பக்தர்கள் வேதனைப் படுகிறார்கள், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய நம்முன்னோர்கள் கோயில்களில் உள்ள குளத்திற்கு நீர் வருவதற்கு ஒரு வழியும், அதிக நீர் வந்தால் வடிய ஒரு வழியும் கட்டி வைத்திருந்தார்கள்.

அதனைத் தூம்பு வடிகால் என்பார்கள், அதிகமான நீர் வந்தால் அதுவே தானாக வடிந்துவிடும், இப்படி இருந்த கோயிலின் தூம்புகளைத் தூர்வாருவதாகக் கூறி பாதியிலேயே பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டதால் இன்று ஒரு மணி நேரம் பெய்த சாதாரண மழைக்கே கோயில் செல்லும் பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு தீர்வு என்ன வென்று மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமாரிடம் பேசினோம், சின்ன பிள்ளையில் இருந்து நான் இந்தப்பகுதியில்தான் வசிக்கிறேன் எனக்கும் மக்களின் கஷ்டங்கள் தெரியும். இரண்டு மாசம்தான் சார் ஆகிறது, இப்பொழுதுதான் சாலை வசதிகள் கழிப்பிட வசதிகள் செய்து முடித்திருக்கிறேன்.

கூடிய விரைவில் இதற்குத் தீர்வு காண்பேன் என உறுதியளித்தார். பொது மக்கள் அறிந்து கொள்ள உங்கள் அலைபேசி எண்ணைத் தரமுடியுமா என்றோம், தாராளமாக குறிச்சுக்கங்க என்றார். (93666 75444), வரலாறு முக்கியம் கவுன்சிலர் சார், பேச்சு பேச்சா இருக்கணும் சட்ட புட்டுனு ஒரு தீர்வை காண்பிங்க.

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியவில்லையா : இதை செய்தாலும் புண்ணியம் தான்...

Last Updated :May 5, 2022, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.