ETV Bharat / state

’உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் வெளியிடப்படும்’ - அமைச்சர் கே.என்.நேரு

author img

By

Published : Aug 29, 2021, 6:40 PM IST

minister-nehru-says-local-body-election-date-to-be-announced-soon
உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் வெளியாகும்- அமைச்சர் கே.என். நேரு தகவல்

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தமிழ்நாடு முதலமைச்சர் இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிப்பார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி: உறையூர் குறத் தெரு திருப்பத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தெரிவித்ததாவது:

54.27 கோடி ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சிப் பகுதியில் இன்று (ஆக.29) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 103.425 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதில், நான்கு இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியும், இரண்டு இடங்களில் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் வெளியாகும்- அமைச்சர் கே.என். நேரு தகவல்

ஜல் ஜீவன் திட்ட அறிக்கை

ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச்சாலையை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்தப் பாலத்திற்கு அருகிலேயே 80 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கம் செய்யப்படும். அதேபோல உறையூர் முதல் வயலூர்வரை நேரடி சாலை அமைக்கப்படும். திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும். திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது.

உள்ளாட்சித் தேர்தல்

மாநகராட்சி விரிவாக்கத்தின்போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும்வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள். மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராமப் பஞ்சாயத்துக்கள் நீங்கலாக தேர்தல் நடத்தப்படும்.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அந்தத் தேர்தலுக்கான தேதியை இன்னும் ஒரு சில நாள்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என அவர் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு புது உத்தரவு வெளியிட்ட காவல் ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.