ETV Bharat / state

’சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மாற்றுங்கள்’ - கமல் பேச்சு!

author img

By

Published : Mar 23, 2021, 2:17 PM IST

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல், “ஏப்ரல் 6ம் தேதியை சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மக்கள் மாற்ற வேண்டும்” என கூறினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல், “ஏப்ரல் 6ம் தேதியை சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மக்கள் மாற்ற வேண்டும்” என கூறினார்.

திருச்சி : திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல், “ஏப்ரல் ஆறாம் தேதியை சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மக்கள் மாற்ற வேண்டும்” என கூறினார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து கமல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “இல்லத்தரசிகள் படிக்க ஒரு மணி நேரம் கிடைத்தால், அது நாளைய தலைமுறையை முன்னேற்ற உதவும். அதனால் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் தடையாக இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, அவர்களுக்கு பயிற்சி அளித்தால் நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பார்கள். 50 வருஷம் நடந்ததை திருத்த, 5 ஆண்டுகள் போதாது. அதனால் தான் நாங்கள் அடுத்த தேர்தல் குறித்தும், தற்போதே பேசி வருகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளும் எங்களுடையது தான்.

தமிழ்நாட்டில் ஊழலை ஒழித்தால், இதே போன்று இரண்டு தமிழ்நாட்டை சுபிட்சமாக வைத்திருக்கலாம். இதை ஐந்து ஆண்டில் செய்து முடிக்க முடியாது. கஜானாவை காலி செய்து, அனைவரது தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் கொடுக்கும் இலவசங்களும் உங்கள் தலையிலுள்ள கடனை உயர்த்துமே தவிர குறைக்காது. இலவசங்கள் என்றைக்குமே உங்கள் ஏழ்மையை போக்காது. உங்களுக்கு வழங்கப்படும் உழைப்பதற்கான வாய்ப்பே ஏழ்மையை போக்கும். அடுத்த தலைமுறையின் வெற்றிக்கு கல்வி மட்டுமே உதவும். உலக தரத்திலான கல்வியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவேன். விலங்குகள்கூட குடிக்காத தண்ணீரை, நாம் குடித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசியல் எங்கள் தொழில் அல்ல. நாங்கள் எல்லோரும் அரசியல்வாதிகளே இல்லை என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கூறுவார்கள். வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மனதிற்குள் உள்ளது. நாங்கள் கேள்வி ஏதும் கேட்டு விடுவோமோ? என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள். எனது வாகனங்களையும் சோதனை செய்தார்கள். எனது வாகனத்தில் நேர்மை கிடைக்கும். என் வியர்வை கிடைக்கும். வேறு எதுவும் கிடைக்காது. ஆனால் கடந்த தேர்தலில், ஒருவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் எடுத்தார்கள். ஆனால், அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. இந்த கோபத்தில்தான் மீசை நாளுக்கு நாள் முறுக்கிக்கொண்டே போகிறது.

நேர்மையான அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். மண்ணை அள்ளுவது எங்கள் உரிமை என்று ஒருவர் பேசினார். அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலர்களுக்கு வேலை நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு மனோதத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க வேண்டும். காவலர்கள் தங்குவதற்கு குடியிருப்பை கொடுத்துவிட்டு அங்கே தங்குவதற்கு அனுமதிப்பது இல்லை. மாறாக 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் மாற்ற முடியும். காவலர்களின் வாக்குகளை பெறுவதற்காக நான் இப்படி கூறவில்லை.

கமல் ஹாசன் திருடன் என்று அவர்கள் கூறலாம். மக்களிடம் சென்று கேட்டுப்பாருங்கள். இன்னும் ஐந்து வருடம் கழித்து சென்று கேட்டுப்பாருங்கள். அவ்வளவு செய்திருப்போம். அதை செய்வதற்கான படையை திரட்டிவிட்டேன். அவர்கள் செய்யவில்லை என்றால் செய்யவைப்பேன். இல்லையென்றால் நீக்குவேன். எனது நண்பரின் ரசிகர்கள் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதலில் நல்ல ரசிகன். நல்ல விஷயங்கள், திறமைகளை நான் ரசிப்பேன். அதன்பின்னர்தான் நான் கலைஞன்.

இங்கே அனைவரும் ஒன்றாக கூடி இருக்கிறோம். அனைவரும் ஒரே அணி, தனித்தனி அணியாக விளையாடக்கூடாது. ஒரே அணியாக தமிழ்நாட்டிற்காக விளையாட இங்கே கூடி இருக்கிறோம். அது மக்கள் நீதி மையம் அணி. தமிழகத்திற்காக இந்த அணி தற்போது விளையாடுகிறது. இந்த போட்டியை பாருங்கள். இரண்டு பேர் ஊழலுக்காக போட்டி போடுவார்கள். அந்த விளையாட்டை பார்க்காதீர்கள். அது விளையாட்டு அல்ல. விபரீதம். இந்த மேடை சரித்திரத்தை உருவாக்குவதற்காக உங்களுக்காக போடப்பட்ட மேடை. எங்களுக்காக போடப்பட்ட மேடை அல்ல.

உங்கள் பிரதிநிதிகளாக தான் நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். அதைப் புரிந்து கொண்டு வரும் ஏப்ரல் 6ஆம் தேதியை சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மாற்றுங்கள். உங்களால் அதை செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும், முதல் முறை ஓட்டு போடும் இளைஞன் தோன்றிவிட்டான். அதில் மக்கள் நீதி மையம் பதிந்துவிட்டது. பெண்களின் ஆசியில் உயர்ந்துவிட்டது. இனி நாளை நமதே என்பது நிச்சயம் ஆகிவிட்டது” என்றார்.

இதையும் படிங்க: ஆமா.. அந்த ரூ.15 லட்சம் கிடைத்ததா? மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.