ETV Bharat / state

“மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படாது” - கி.வீரமணி கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 8:47 AM IST

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படாது, இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்படும்
கி.வீரமணி

K.Veeramani: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படாது, இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்படாது, இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்படும்

திருச்சி: திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு கூட்டமானது கட்சியின் தலைவர் கி.வீரமணி தலைமையில் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (அக்.20) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்காரு அடிகளார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த ராகுல் காந்திக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பங்காரு அடிகளாரின் கருத்துக்களிலும், கொள்கைகளிலும் எங்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள் உள்ளது. அதே நேரத்தில் அவர் தனக்கான ஒரு வழியை உருவாக்கிக் கொண்டு, தமிழ் திரு அடிகளாக இருந்தார்.

குறிப்பாக தமிழில் வழிபாடு, பெண்கள் பூஜை செய்யலாம் என்கிற நடைமுறையை அவர் கொண்டு வந்தார். சனாதனத்திற்கு நேர் எதிராக செயல்பட்டார். அவர் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. அவர் ஆன்மீகப் பணி மட்டுமல்லாமல், கல்விப் பணியையும் செய்து மனித நேயராக இருந்தார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிலையில், நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கை, இன்று அகில இந்திய அளவில் பேசு பொருளாகியுள்ளது. சாஅதியை ஒழிக்கத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க கூறுகிறோம். சமூகநீதியை நிலைநாட்டும்போது அது குறித்தான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றால், நீதிபதிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பு இருக்கிறதா, எந்த சாதியில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வி கேட்கிறார்கள். சமூக நீதியை ஏட்டுச் சுரக்காய் இல்லாமல் நடைமுறைகளில் கொண்டு வர சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவையான ஒன்று.

இன்று பாஜக அரசு, விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் மனுதர்ம யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்து, குலத்தொழிலை செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். ராஜகோபாலாச்சாரி அரைநேரம் இதை செய்ய வேண்டும் என கூறினார். தற்பொழுது, அதை முழு நேரமாகச் செய்ய வேண்டும் என திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி, கல்லூரிகள் இருந்து வருகிறது. தங்கள் பிள்ளைகளை கடன் வாங்கியாவது கல்வி கற்க வைக்க வேண்டும் என நினைக்கக் கூடிய ஏழை எளிய மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இந்த நிலையில், இது போன்ற ஒரு திட்டத்தை பாஜக அரசு கொண்டு வருவது ஆபத்தான ஒன்று. இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு வர வேண்டும்.

எனவே, அந்த திட்டம் குறித்து விளக்கும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளோம். அந்த பிரச்சாரம் நாகையில் தொடங்கி, மதுரையில் முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருவருக்கு மதிப்பூறு முனைவர் பட்டம் வழங்குவது என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் உரிமைகளில் ஒன்று. அந்த வகையில், தகைசால் தமிழர் விருதை முதன் முதலில் பெற்ற சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. அதற்கு ஆர்.எஸ்.எஸ்-இன் பிரதிநிதியாக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அவருக்கு இல்லாத அதிகாரங்களை அவர் பயன்படுத்தி வருகிறார்.

அவருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலர் அவரைத் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். ஒரு சுயமரியாதை உணர்வு உள்ளவராக இருந்திருந்தால், அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்படாது. இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி ஏற்படும். அப்படி ஏற்படும்போது, ஆளுநர் என்கிற பதவி இருக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலினை செய்யப்படும்.

மனித சமூகத்திற்கு தொண்டாற்றியவர்கள் ஆன்மீகவாதியாக இருந்தாலும் சரி, நாத்திகவாதியாக சரி அவர்கள் பணி மனித சமூகத்திற்கான பணியாக இருந்தால், நிச்சயம் அரசு அதற்கு மதிப்பளிக்கும். அந்த வகையில்தான், மனிதநேயப் பண்பாளராக இருந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.