ETV Bharat / state

"தமிழ்நாட்டில் ஆரிய ஆட்சி; சூழ்ச்சியால் வந்ததே திராவிட ஆட்சி" - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 6:10 PM IST

Updated : Oct 23, 2023, 6:15 PM IST

மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் ஆளுநர் சிறப்புரை
மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் ஆளுநர் சிறப்புரை

மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு, ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்பு குழு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் இணைந்து திருச்சியில் இன்று (அக்.23) விழா நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் முன்பு காலத்தில் இருந்து ஆரிய ஆட்சியே நடைபெற்றது என்றும், பின்னர் பலரின் சூழ்ச்சியால் திராவிட ஆட்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி: ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்பு குழு மற்றும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி (NR IAS Academy) மையம் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா திருச்சி ராம்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் இன்று (அக்.23) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியில் பேசியதாவது, "மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள். சுதந்திரத்திற்கான முதல் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதை ஸ்ரீரங்கம் கோயிலில் ஒட்டினார்கள்.நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களின் தியாகங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நினைவுபடுத்தம் பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். அது மகிழ்ச்சி அளிக்கிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் தமிழ்நாட்டிற்கு வந்த போது தமிழ்நாடு அரசிடம், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலை கேட்டிருந்தேன். அவர்கள் 40-க்கும் குறைவான பெயர்களை மட்டும் தான் எனக்கு தந்தார்கள். பின்னர் தேடி படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக போராடி இருப்பது தெரிய வந்தது.

2012 ஆம் ஆண்டு சிவகங்கையில் நடந்த ஒரு சிறிய கலவரத்தை தொடர்ந்து இன்று வரை, அக்டோபர் 23-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அங்கு மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவரின் நினைவு தினம், பிறந்த தினம் என்றால் இப்படி இவர்களால் தடைபோட முடியுமா?. முத்துராமலிங்க தேவர் மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் இன்று அவரை ஒரு ஜாதி தலைவராக சுருக்கி விட்டனர்.

தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மறக்கடிக்கப்பட வேண்டும் என்றே, திட்டமிட்டு இங்கு ஆட்சி செய்தவர்கள் அதை செய்தார்கள். அவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவில்லை. பாடப்புத்தகங்களில் அவரள் வரலாறு அழிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து, அவர்களை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களை ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள்.

தற்போதும் லண்டன் அருங்காட்சியகத்திற்கு சென்று படித்தால் ஆங்கிலேயர்களுக்கு யாரெல்லாம் ஏஜெண்டுகளாக இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆங்கிலேயர்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தியின் போது தமிழ்நாடு அரசு புகைப்பட கண்காட்சி நடத்தினார்கள். அதில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு 18 முறை வந்ததை நினைவுபடுத்தும் வகையிலான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்படங்கள் இருந்தது. அதில் திராவிட இயக்க கருத்தியலை கொண்ட ஒருவர் புகைப்படம் கூட இல்லை. அந்தப் புகைப்பட கண்காட்சியை இந்த முறை அவர்கள் நடத்தவில்லை.

மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் ஜாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள். 'எந்நன்றி கொண்டாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்நன்றி கொன்ற மகற்கு' என நன்றி மறப்பது குறித்து திருவள்ளுவர் கூறி உள்ளார். இன்று தமிழ்நாட்டில் பிறந்து தம் வாழ்வை தியாகம் செய்தவர்கள் மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள்.

ராபர்ட் கால்டுவெல் தான் திராவிட கருத்தியலை உருவாக்கியவர். பிரிட்டிஷ் இந்தியாவை ஆள நினைத்த போது முதலில் மிஷினரிகளை அனுப்பினார்கள். அதில் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல்லை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். அவர் தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார். இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். புண்ணிய பூமியான இங்கு ஏராளமான ரிஷிகளும், முனிகளும் வாழ்ந்துள்ளார்கள்.

இந்தியாவிற்கு சுதந்திரம் தர கூடாது என தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் லண்டன் செப்று பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தனர். சுதந்திர தினத்தை கருப்பு தினம் என அறிவித்தனர். அவர்களை தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். சுதந்திர போராட்ட வீரர்களை கொண்டாடுவதில்லை. நாம் கடந்த கால வரலாறுகளை நினைவு கூர்வது அவசியம். நமக்குள் இந்த பிரிவினை இருந்ததால் தான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார்கள்.

சுந்தந்திர போராட்ட வீரர்களின் உண்மை சம்பவங்களை வெளிகொணர தமிழ்நாட்டில் ஆராய்ச்சி மாணவர்கள் யாரும் ஆய்வு செய்ய முன்வருவதில்லை. அது எனக்கு வருத்தமாக உள்ளது. வருங்கால தலைமுறையினர் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்" என பகிரங்கமாக ஒருமைக் கருத்துக்களுடன் அவரது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தலைவர் பரிந்துரை கோப்புகளை மீண்டும் நிராகரித்த ஆளுநர்.. முறைகேடு புகாருக்கு ஆளான நபருக்கு உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி!

Last Updated :Oct 23, 2023, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.