ETV Bharat / state

மகளிர் உரிமைத் தொகை திட்ட குளறுபடி எப்போது சரியாகும்? - அமைச்சர் கீதாஜீவன் பதில்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 5:43 PM IST

Kalaignar Magalir Urimai Thogai Scheme: 'மகளிர் உரிமைத் தொகை' வழங்குவதில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் எனவும், ரூ.4 லட்சம் ஆண்டு வருமானம் இருப்பின் இதில் பயன் பெற முடியாது எனவும், ரூ.1000 பெறாமல் வரும் குறுந்தகவல் வந்தால் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அமைச்சர் கீதாஜீவன் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பேட்டி

திருச்சி: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் திருச்சியில் இன்று (செப்.27) நடைபெற்றது.

யாருக்கெல்லாம் ரூ.1000 வரும்: இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன், '6 மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அரசு வேலையில் உள்ளவர்கள் வங்கியில் நிரந்தரமாக பணம் வருபவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாயை விட அதிகம் இருப்பதால், மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai Scheme) வராது. ஒரு சிலர் குடும்ப அட்டையில் தாய் தந்தை ஒரு மாவட்டத்திலும், மகன் வெளிமாநிலத்திலும் இருப்பார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வருமானம் என்றால், அந்த மாதிரி குடும்பத்திற்கும் மகளிர் உரிமைத் தொகை வராது. முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை வாங்குபவர்கள் குடும்பத்தில் மருமகளோ அல்லது பெண்ணோ இருந்தால் மகளிர் உரிமைத் தொகை வந்துவிடும். இவர்கள் இன்னொரு உதவித்தொகை பெற முடியாது' என்று தெரிவித்தார்.

மேல்முறையீட்டுக்கு பணம் வசூலிக்கக்கூடாது: தொடர்ந்து பேசிய அவர், 'இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருப்பது OTP பிரச்னையால்தான். முதல் நாள்தான் இ-சேவை மையத்தில் காத்திருக்கும் நிலை இருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுவும் முறையாக நடைபெறுகிறது.

இ-சேவை மையம் அனைத்தும் பரபரப்பாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீட்டுக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்கக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். வங்கிக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கியில் பணம் பிடித்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

பெறாத ரூ.1000-க்கு குறுந்தகவல் வந்தால் மேல்முறையீடு: 'குறைவான ஊதியம் வாங்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் ஊதியம் வருகிறது என்று குறுந்தகவல் வருகிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். நானே பார்த்தவரையில், குறைவான ஊதியம் வாங்குபவர்களுக்கு கூடுதல் வருமானம் வாங்குவீர்கள் என்று குறுந்தகவல் வருகிறது. அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அவர்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, மகளிர் உரிமைத் தொகை வந்துவிடும். பதிவு செய்யாதவர்களுக்கும் பணம் செல்கிறது. இதையெல்லாம் மாற்றுவதற்குதான், 30 நாள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஒருவர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது என்று குறுந்தகவல் வரும் நிலையில், வேறு ஒரு வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் விரைவில் சரி செய்யப்படும். மகளிர் உரிமைத் தொகை வழங்குவது போன்ற மிகப்பெரிய திட்டங்களை செயல்படுத்தும்போது, சில குளறுபடிகள் நேரத்தான் செய்யும்.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கொடுத்திருக்கிறார். நிச்சயமாக மேல்முறையீடு செய்யலாம். மகளிர் உரிமைத் தொகை தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வாங்குபவருக்கு மகளிர் உரிமைத் தொகை என்பது ஒரு பொருட்டே இல்லை' என்று அவர் மேலும் கூறினார்.

இதையும் படிங்க: 'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் வெளிவந்த போலி ஜிஎஸ்டி பில் விவகாரம்.. வேலூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.