ETV Bharat / state

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் இருக்காது” - துரை வைகோ

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:12 AM IST

there-will-be-no-rural-employment-program-in-the-next-five-years-durai-vaiko-warns
அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது - துரை வைகோ எச்சரிக்கை!

Durai Vaiko: அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது என திருச்சியில் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது - துரை வைகோ எச்சரிக்கை!

திருச்சி: திருச்சியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில், கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ கூறியதாவது, “தஞ்சை மண்டலம் பிச்சை பாத்திரம் ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை வாரியம் சொல்வதை பொருட்படுத்தாமல், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கிறது. இதனால், தஞ்சை மண்டலத்தில் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு போதிய நிதியை வழங்காமல், ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 16 கோடி பேர், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்றால், 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், ஆண்டுக்காண்டு நிதியை குறைத்து வருகிறது. அதனால், கிராமப்புற ஏழை எளிய மற்றும் பட்டியலின மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, 100 நாள் வேலை திட்டத்துக்கு போதுமான நிதியை வழங்க வேண்டும்.

விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. வட மாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு மொத்தமாக 50 நாட்கள் கூட வேலை கிடைக்கவில்லை.

சில கிராமங்களில் 20 நாட்கள் கூட வேலை கொடுப்பதில்லை என்கின்றனர். இதை பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை. ம.தி.மு.கதான் பேசுகிறது. அடுத்து நான்கு, ஐந்து ஆண்டுகளில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டமே இருக்காது. தமிழத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், தமிழக அரசு தரப்பில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துள்ளனர். நீர் மேலாண்மை வாரியம், மத்திய அரசிடமும் முறையிட்டுள்ளனர். சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு, நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசையும் சேர்த்துதான் கண்டிக்கிறோம். முதன்மை அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால், அவர்கள் அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியதால், தி.மு.க கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அங்கு செல்லலாம் என்ற மாயையை ஊடகத்தினர்தான் உருவாக்கி உள்ளனர். அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதற்கும், தி.மு.க கூட்டணியில் பாதிப்பு வருமா என்பதற்கும் சம்பந்தமே இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக திமுக பேரூராட்சித் தலைவர் மீது திமுக உறுப்பினர்களே புகார் - சேலத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.