ETV Bharat / state

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள் - வேலூர் இப்ராஹிம்

author img

By

Published : Dec 5, 2022, 10:23 AM IST

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள்

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராமல், அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

திருச்சி: பாஜக சிறுபான்மை அணியின் மாநில தலைவர் டெய்சி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், பங்கேற்க வந்த சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராஹிம் கூறியதாவது, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு முழுவதும், சிறுபான்மை அணியின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்படுகிறது.

மேலும் சிறுபான்மையின ஓட்டுக்களை அதிகரித்து, வரும் லோக்சபா தேர்தலில், தமிழ்நாட்டில் இருந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் எம்.பி.,க்களை தேர்வு செய்து அனுப்பி, பிரதமர் மோடியின் நல்லாட்சியை தொடரச் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாடு மக்கள் தி.மு.க ஆட்சியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மதத்தை கொண்டு வராதீர்கள்

திருச்சி போன்ற ஆன்மீக நகரத்தில், கலாச்சாரத்துக்கும், பண்பாட்டுக்கும் எதிராக, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக, மது போதையில் கூத்தடிக்கும் கேளிக்கை விடுதி மற்றும் ‘பார்’ துவங்கும் நிலை உள்ளது.

அதை எதிர்த்து போராட்டம் நடத்தும் பா.ஜ., கட்சியினரை, தி.மு.க., அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது. போராட்டம் நடத்திய மாவட்ட தலைவர் போன்ற நிர்வாகிகளை கைது செய்திருப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து, மதுக்கடைகளை மூடுவதற்காக போடப்படும், என்று தேர்தல் வாக்குறுதி அளித்தனர்.

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், மக்கள் குரலாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இஸ்லாமிய பயங்கரவாத சக்திகளும், வாழ்வுரிமை கட்சியினரும், திருமாவளவன் போன்றவர்களும் டிசம்பர் 6ஆம் தேதி, மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்துள்ளனர். ஜனநாயகரீதியாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, நில பரிமாற்றம் அடிப்படையில் இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் சுமூகமாக அமைதியாக இருக்கும் போது, முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்துக்கு, சிறுபான்மை அணி முடிவு கட்டும். தைரியம் இருந்தால், முற்றுகையிட்டு பாருங்கள். மாநில பொதுச் செயலாளர் கல்வாரி தியாகராஜன் தலைமையில், முற்றுகை போராட்டத்தை சிதறடிக்க, அரணாக திரண்டு நிற்போம். பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தி.மு.க அரசு செயல்பட்டால், எதிர்த்து நிற்போம்.

மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்று கூறுபவர்கள், அதை தவிர்த்து விட்டு, கருத்தியல் ரீதியான விவாதத்துக்கு வர வேண்டும். கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமீசா முபின், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்போடு தொடர்புடையவர் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. கார் சிலிண்டர் வெடிப்பாக இல்லாமல், மனித வெடிகுண்டாக தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்திருப்பது, புலனாய்வில் தெரிந்துள்ளது.

அதற்கு பின்னால், யார் இருக்கிறார் என்று ஆய்வு செய்ய வேண்டியது, மத்திய உளவு அமைப்பின் பொறுப்பு. மாநில உளவு அமைப்பு அதற்கு உடன்பட வேண்டும். இதை எப்படி, ஒரு சமூகத்துக்கும், மதத்துக்கும் எதிராக திருப்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த பிரச்சனையில் தீர்வு கிடைக்க, மதத்தை கொண்டு வராமல், குற்றவாளி யாராக இருந்தாலும் கண்டுபிடித்து, கைது செய்ய வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி: தங்கம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.