ETV Bharat / state

"நாடாளுமன்றத்தில் மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது" - டி.ஆர்.பாலு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 11:38 AM IST

Updated : Aug 23, 2023, 2:16 PM IST

dmk
திமுக

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருச்சி: திமுக தெற்கு மாவட்டம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் கலைஞர் சாதனைகள் ஆய்வரங்கம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுகவின் கொடியை திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு ஏற்றி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஆய்வரங்கத்தை தொடக்கி வைத்து பேசிய டி.ஆர்.பாலு, "அய்யா என என்னை அழைக்கிறார்கள். அய்யா என்றால் அது தந்தை பெரியார் மட்டும் தான். வேறு யாரும் அதற்கு ஈடாக மாட்டார்கள். தற்போது 30 பேர் மட்டுமே திமுக எம்பிக்கள் இருக்கிறார்கள். ஆனால், பாஜவில் 303 பேர் இருக்கிறார்கள். மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தால் அவர் கட்சியினர் ஆரவாரத்துடன் அவரை வரவேற்கிறார்கள். மோடியை பார்த்தால் பொறாமையாக உள்ளது.

அந்த பொறாமை நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். அப்பொழுது தான் வீரியமாக வேலை செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய முடியும். இன்று வட இந்தியாவில் இருக்கும் எம்பிக்கள் அதிகம் கலைஞர் குறித்து எங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தான்.

அவரது செயல்பாடுகளால், கலைஞரை யார் என தெரிந்து கொள்வதற்காக அவர் குறித்து அதிகம் கேட்கிறார்கள். கலைஞர் கொண்டு வந்த திட்டங்களும், இனி அவர் பெயரால் கொண்டு வரக்கூடிய திட்டங்களாலும் கலைஞர் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்" என தெரிவித்தார்.

ஆளூர் ஷாநவாஸ் பேசியது, "கலைஞர் முன்பை விட இன்று அதிகம் தேவைப்படுகிறார். கலைஞர் குறித்து வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர் பிறந்தநாளன்று ஊழலின் தந்தை என சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்புகிறார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்காக டி.டி.கிருஷ்ணமாச்சாரி தான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை புகுத்தியவர் ராஜாஜி தான். ஊழலுக்காக சிறை சென்றவர் ஜெயலலிதா.

ஆனால் அவர்கள் குறித்தெல்லாம் யாரும் பேசமாட்டார்கள். ஆனால் இதில் எந்த குற்றமூம் நீருபிக்கப்படாத கலைஞர் மீது வேண்டுமென்றே பொய்யை பரப்புகிறார்கள். அவர்களின் பொய் பரப்புரையை நாம் முறியடிக்க வேண்டும். இன்று பாஜகவினர் பட்டியலினத்திலிருந்தும், பழங்குடியினத்திலிருந்தும் ஒரு நபரை உச்சப்பதவியில் அமர்த்தி விட்டு பெருமையாக பேசுகிறார்கள்.

சமூகத்தில் ஒருவரை உச்சப்பதவியில் அமர்த்தியவர் அல்ல கலைஞர், சமூகத்தையே அதிகாரத்தில் அமர வைத்தவர் தான் கலைஞர். இட ஒதுக்கீடு உள்ளிட்டவை மூலமாக ஒரு சமூகத்தையே மேம்படுத்தினார். பாஜகவின் புரட்டு அரசியலை விரட்ட கலைஞர் அரசியலை நாம் தொடர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டு அரசியலையும் கல்வியும் பிரிக்க முடியாதது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

கல்விக்காகவே நாம் ஒன்றிய அரசோடு தொடர்ந்து போராடி உள்ளோம். தற்போது கல்விக்காகவே நாம் ஒன்றிய அரசோடு போராடி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது என பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலம் நீட்டிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கூறிய போதும் அதை மீறி அவருக்கு பதவி நீட்டிப்பு செய்கிறார்கள்.

இது போல் பலவற்றில் உச்ச நீதிமன்றம் கூறியும் அதை மீறி செய்கிறார்கள். ஒன்றிய அரசு நிறைவேற்றும் எல்லா மசோதாவிற்கும் ஒப்புதல் அளிக்கும் குடியரசு தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் ரத்து மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் வகையில் நீட் ரத்து மசோதாவை சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி விட்டது. இனி குடியரசு தலைவர் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்றார்.

சுப.வீரபாண்டியன் பேசுகையில், "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நாளில் கலைஞர் சாதனைகள் குறித்தான நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. கலைஞரின் சாதனைகள் பல உள்ளன. அவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்ணா தொடங்கி வைத்த திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தியவர் கலைஞர் அதை இன்னும் விரிவாக்கிக் கொண்டிருப்பவர் தற்போதைய முதலமைச்சர். இன்று ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறார்கள். அந்த தேர்வால் தான் தகுதியான மருத்துவர்கள் உருவாவார்கள் என்கிறார்கள்.

அந்த தேர்வு கேதான் தேசாய் என்பவாரால் உருவாக்கப்பட்டது. அவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர். ஊழல்வாதியால் உருவாக்கப்பட்டது தான் நீட் தேர்வு. காங்கிரஸ் கூட்டணி அரசுதான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் அந்த கூட்டணியில் அங்கம் வகித்த போதும் நெஞ்சிரத்தோடு அந்த தேர்வை எதிர்த்தவர் கலைஞர். பாஜக அரசு 75 ஆயிரம் லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது என சி.ஏ.ஜி அறிக்கை கொடுத்துள்ளது. அது குறித்து யாரும் பேச மறுக்கிறார்கள். 2ஜி விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என நீதிமன்றமே கூறி விட்டது. சி.ஏ.ஜி அறிக்கை குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: NLC : தொழிலாளர்கள் கோரிக்கை மீது 8 வாரத்தில் முடிவு.. தொழிலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்!

Last Updated :Aug 23, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.