ETV Bharat / state

திருச்சி சட்டப் பல்கலைக்கழக பட்டியலின மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா? விசாரணை குழு என்ன சொல்கிறது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 2:50 PM IST

திருச்சியில் கொடூரம்
திருச்சி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் பட்டியலின மாணவர் குடித்த குளிர்பானத்தில் சிறுநீர் கலப்பா

discrimination against dalit student: பட்டியலின மாணவர் அருந்திய குளிர்பானத்தில் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவர் சிறுநீர் கலந்து கொடுத்து குடிக்க வைத்ததாக புகார் அளித்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி: இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கும் பட்டியலின மாணவர் அருந்திய குளிர்பானத்தில் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவர் சிறுநீர் கலந்து கொடுத்து குடிக்க வைத்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பல்கலைகழக துணை வேந்தரால் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழு வரும் 18 அல்லது 19 ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்கும் எனக் கூறப்படுகிறது.

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம். இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வரும் பட்டியலின மாணவர் ஒருவர், அவருடன் படிக்கும் சக மாணவர்கள் இருவர் மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் படி கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாலை, பாதிக்கப்பட்ட பட்டியல் இன மாணவரும் அவருடன் இளநிலை இறுதியாண்டு சட்டப் படிப்பு படிக்கும் வேறு சில மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் சந்தித்து உள்ளனர்.

அவர்கள் தங்களின் தேர்வுகள் தொடர்பாக சந்தித்து பேசிக் கொண்டிருந்ததாகப் புகாரில் அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகத்தின்படி, வழக்கமான தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் மறுதேர்வுகள் நடந்துள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர் தன் புகாரில் அவரும் மற்ற மாணவர்களும் இணைந்து தங்களது படிப்பு குறித்து ஆலோசித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, மாணவர்கள் குளிர்பானம் அருந்தி உள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் குடித்த குளிர்பானத்தில் மட்டும் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதை தான் தெரியாமல் குடித்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தன் புகாரில் குறிப்பிட்டு உள்ளார். மேலும் இந்த சம்பவம் ஜனவரி 6 ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் நடந்ததாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் தன்னுடன் படிக்கும் இரு மாணவர்கள் மீது ஜனவரி 10ஆம் தேதி பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இண்டிகோ விமானி மீது தாக்குதல்! என்ன காரணம்? வீடியோ வைரல்!

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "விதிகளின்படி மாணவர் புகார் வந்தவுடனேயே, அது பல்கலைக்கழக துணை வேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அதே நாளில், குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். துணை வேந்தர் அமைத்துள்ள 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவில் பல்கலையின் உதவிப் பேராசிரயர்கள் உள்ளனர். அவர்கள், ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள், இருப்பிட விடுதி காப்பாளர் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழகம் அமைத்த குழு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர் புகாரை திரும்பப் பெற முயன்றதாக சொல்லப்படுகிறது. ஆனால், ராகிங் தொடர்பான சட்ட விதிகளின்படி மாணவர் புகாரை திரும்பப் பெற முடியாது என பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாணவர் அளித்த இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய 3 பேர் கொண்ட குழுவினர், வரும் 18ஆம் தேதி அல்லது 19ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்ட விதிகளின் படி, விசாரணையில் மாணவர் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகும்பட்சத்தில், அறிக்கை கிடைத்த 24 மணி நேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் மாணவர் புகார் கொடுக்க தாமதித்ததற்கான காரணம் மற்றும் தற்போது புகாரை திரும்பப் பெறுவதற்கு முயற்சித்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின் மக்கள் மீது இது போன்ற அருவருக்கத்தக்க வன்கொடுமைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ரூ.15 கடன்.. மகன் கண்முன்னே தந்தை மீது தாக்குதல்.. உயிரிழந்தவருக்கு நீதி கேட்டு சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.