ETV Bharat / state

திருச்சி To வேதாரண்யம் உப்புச்சத்தியாகிரக பாதயாத்திரை - ப.சிதம்பரம் தொடங்கிவைப்பு!

author img

By

Published : Apr 13, 2022, 7:55 PM IST

உப்பு சத்யாகிரக பாதயாத்திரை
உப்பு சத்யாகிரக பாதயாத்திரை

திருச்சி முதல் வேதாரண்யம் வரையிலான உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரையை ப.சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி: மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ராஜன் நினைவு இல்லத்தில் காந்தியடிகள் திருவுருவப் படத்திற்கும், அதனைத்தொடர்ந்து உப்புச்சத்தியாகிரக நினைவுத்தூணிற்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., திருநாவுக்கரசர் எம்.பி., காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை அகற்றவும் காங்கிரஸ் ஆட்சியை அரியணை ஏற்றவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் திருச்சி முதல் வேதாரண்யம் வரையிலான உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரையை ப.சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்: பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், “வெள்ளையனை துரத்தவேண்டும் என்பதற்காக நடைபயணம் மேற்கொண்டதனை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளையனை விட கொடிய மோடியும், அமித் ஷாவையும் தூக்கி எறிய வேண்டும். வெள்ளைக்காரர்கள் நாகரிகமானவர்கள் என்பதால் சாத்வீகமாக செய்தோம். இவர்கள் இருவரும் வன்முறை, அநாகரிகத்தின் உச்சம் என்பதுடன், நாம் பெற்ற சுதந்திரம் இவர்கள் கையில் இருப்பதால் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.

எந்த சாட்டைகளைக் கொண்டு மாடுகளை விரட்ட வேண்டுமோ அந்த சாட்டையைக் கொண்டு இந்த மாடுகளை விரட்ட வேண்டும். பிரதமர் மோடிக்கு மாடும், மாட்டுச் சாணமும், மாட்டு மூத்திரமும் தான் தெய்வம். மோடியையும், அமித் ஷாவையும் நாம் தைரியமாக எதிர்க்கவில்லை. இந்த நாடு சின்னாபின்னமாக போய்விடக்கூடாது என்பதற்காக எதிர்த்தாக வேண்டும். இந்தியை திணிக்கப்போகும் வேட்டையில் அமித் ஷா ஈடுபட்டுள்ளார்.

ஒருபடி மேலே சென்று மோடி பல கேடித்தனமான திட்டங்களை அறிவித்துள்ளார். மதம், சாதி, உணவு பழக்கத்தால் நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் சோவியத் யூனியன் உடைந்ததுபோல மாநிலங்கள் பல நாடுகளாக உடையும். மொழி, உடை, மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையீட்டால் அப்படிப்பட்ட இந்தியா தேவையில்லை என்று எண்ணத் தோன்றும். வாழ்ந்தால் சுயமரியாதையோடு வாழ்வோம். தமிழ் மொழிக்கு இழுக்கு என்று சொன்னால் வீழ்வதே மேல்” என்றார்.

எந்த மொழிக்கும் எதிரானவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல: தொடர்ந்து கே.எஸ். அழகிரி பேசுகையில், “மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போது வரி விதிக்காமல் பொருளாதாரக் கொள்கையை உயர்த்திக்காட்டினார். பாஜக அடிப்படை விசயங்களை மாற்றம் செய்வதை பரப்புரை மூலம் எடுத்துக்காட்ட வேண்டும். இந்தியாவில் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்ல. இந்தி இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஆனால், அதனை திணிக்கக்கூடாது. மொழிவழி மாநிலங்கள் நேரு உருவாக்கியதால் ஒன்றுபட்ட இந்தியாவாக உள்ளதை அமித் ஷா சிதைக்கப் பார்க்கிறார்” என்றார்.

சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது:நிகழ்ச்சியில் ப. சிதம்பரம் பேசுகையில், “பாடப்புத்தகத்தில் இருந்து நேரு அத்தியாயத்தை எடுத்துவிட்டார்கள் என்றால் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உப்புக்கு ஈடாக மதம், இனம், மொழி போன்ற அடையாளங்களில் கை வைக்கிறார்கள். உரிமைகள் குறித்து அரசுக்கு மக்கள் தான் அதிகாரம் தருகிறார்கள்.

ஆனால், தற்போது நிலை தலைகீழ். சுதந்திரம் பறி போனது என்ற கவலைப்பட்ட காலம் இருக்கிறது; சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகிறது என்ற கவலைப்படக் கூடிய காலத்தில் நாம் இருக்கிறோம். இனி எல்லாமே பறிபோகும்'' என்றார்.

உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரை

செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், “இந்திய சுதந்திர வரலாற்றை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்றும் நமது உரிமைகள் மீறப்படுவதுடன், மொழி, உடை, உணவு, பேச்சு, எழுத்து, சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை உணர்ந்து இதனை எதிர்க்கும் வகையில் 92 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்கள் வளர்த்த போராட்ட உணர்வை மீண்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடைப்பயணம் அமைந்துள்ளது. 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த நடைப்பயணத்தை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க: ஏப்.14; அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ தினம்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.